"லோக்சபா தேர்தலில் 'நோட்டோ'க்கு தனிச்சின்னம் வைக்கப்படும்; வாக்காளர்கள் ஓட்டுக்காக பணம் வாங்குவது, எதிர்காலத்தை வேட்பாளர்களிடம் அடகு வைப்பதற்கு சமம்,” என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மதுரையில் தெரிவித்தார்.
மதுரையில், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம், மூன்று நாட்களாக நடந்தது. நேற்றைய கூட்டத்திற்கு, பிரவீன்குமார் தலைமை வகித்தார். தேர்தல் சம்பந்தமான 450 பக்கங்கள் கொண்ட நடத்தை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் 2 கட்டமாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மதுரையில் தென், மத்திய மண்டலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. தமிழகத்தில் கடந்த தேர்தலின்போது 14 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தற்போது கணக்கு எடுக்கும் பணி நடக்கிறது. கள்ள ஓட்டு அளிப்பது, ஒரு சாவடியில் 75 சதவீத ஓட்டுக்கள் பதிவாவது, 30 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகள் பதிவாவது போன்றவை, பதட்டமான சாவடிகளாக கருதப்படும். இது போன்ற கணக்கெடுக்கும் பணிகள் நடக்கிறது. கடந்த முறை மாநிலத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டது. வரும் தேர்தலை எப்படி நடத்துவது என்பது பற்றி தற்போது கூற முடியாது. துணை ராணுவம், பாதுகாப்பு வீரர்கள், போலீசாரின் பயண நேரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு எத்தனை நாட்கள் என்பது பற்றி தேர்தல் கமிஷனர் அறிவிப்பார். ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்திய 'நோட்டா' ஓட்டுப்பதிவிற்கு, ஓட்டு இயந்திரத்தில், தனி சின்னம் வைக்கப்படும். யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாதவர்கள் அதில் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யலாம். அதேபோல், ஓட்டு இயந்திரத்தில் யாருக்கு ஓட்டு அளிக்கிறோம் என்ற விபரம் இயந்திரத்தில் சின்னத்துடன் பதிவாகும். அதை வாக்காளர்கள் ஓட்டு இயந்திரத்தில் உள்ள கண்ணாடி மூலம் பார்க்கலாம். இதன் மூலம் ஓட்டு எண்ணிக்கையின்போது ஏதும் தவறுகள் ஏற்பட்டால் மறு எண்ணிக்கைக்கு உதவும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் குற்றம் என்றாலும் முழுமையாக அதை குறைக்க முடியவில்லை. வாக்காளர்கள் ஓட்டுக்காக பணம் வாங்குவது, தங்கள் எதிர்காலத்தை வேட்பாளர்களிடம் அடகு வைப்பதற்கு சமம். வாக்காளர்கள் பணம் வாங்குவதாலேயே நாட்டில் லஞ்சமும், ஊழலும் அதிகரித்து விட்டது. வாக்காளர்கள் பணம், இலவசங்கள் பெறாமல் உரிமையோடு தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பல புகார்கள் வந்தாலும், அதை யாரும் நிரூபிக்க முன்வருவதில்லை. தற்போது தொழில்நுட்ப வசதிகள் ஏராளமான உள்ளன. பணம் கொடுக்கும்போது, தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுத்து ஆதாரத்துடன் அனுப்பினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதுபோல் தகவல் தருபவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment