Wednesday, 19 February 2014

ஊராட்சி பள்ளியில் குப்பை: மாணவர்கள் அள்ளும் அவலம்

மாமல்லபுரம்:சேகரமாகும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், மாணவர்களை கொண்டு அப்புறப்படுத்தும் அவலம், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரங்கேறியது.

துர்நாற்றம்:மாமல்லபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் சேகரமாகும் கழிவுகள், மரங்களிலிருந்து உதிரும் இலைகள் ஆகியவை குவிந்து, குப்பை அதிகரித்து வருகிறது. சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.பொதுவாக, பள்ளியில் சேகரமாகும் குப்பையை அகற்ற, தனிப் பணியாளரை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பரிந்துரையின் பேரில் உள்ளாட்சி நிர்வாகம் நியமிக்கும்.ஆனால், இந்த பள்ளியில், குப்பையை அகற்ற தனிப் பணியாளர் நியமிக்கப்படவில்லை. மாறாக, அவ்வப்போது பேரூராட்சி துப்புரவு ஊழியர்களும், தனியார் தொண்டு நிறுவன பணியாளர்களும் அகற்றி வந்தனர்.இந்நிலையில், திடீரென குப்பையை அகற்ற கடந்த சில வாரங்களாக, அவர்கள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் பெய்த மழையால், பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது.பள்ளி ஆசிரியர்கள், நேற்று மாணவர்கள் மூலம் குப்பையை அப்புறப்படுத்தினர். குப்பை தூக்க முடியாமல், மாணவர்கள் தூக்கிச் சென்று, சாலை ஓரத்தில் கொட்டினர்.


யார் கேட்பது?





இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், சூஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். எங்களைப் போல் வசதி இல்லாத குழந்தைகள் என்பதால், இதை யார்தான் கேட்பது? அவர்கள் குழந்தைகளை இப்படி குப்பையை அள்ளச் சொல்வார்களா? சில நாட்களாக கழிவுநீரில் சேகரமான குப்பையில் இருந்து விஷ வாயு கசிந்து, மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் யார் பதில் சொல்வார்கள்' என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, துப்புரவு பணியை உள்ளாட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பல நாட்களாக குப்பை சேர்ந்தும், அப்புறப்படுத்த அவர்கள் வரவில்லை. துர்நாற்றம் வீசியதால் அகற்றினோம்' என்றனர்.

No comments:

Post a Comment