கோவை மாவட்ட துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
துப்புரவு தொழிலாளர்கள்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், துப்புரவு தொழிலாளர்கள், குப்பை பொறுக்குபவர்கள், தோல் பதனிடுபவர்கள் உள்ளிட்ட தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு, அதாவது 1–ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதற்கு சாதி, மதம் குடும்ப வருமானம் என்று எந்தவித வேறுபாடும் கிடையாது. இந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகை
தங்களது பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விரும்பும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவன அதிகாரியிடம் இருந்து சான்று பெற்று, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் என்றால் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து, சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
மாநகர் மற்றும் நகர்புறங்களில் வசிப்பவர்கள் என்றால் சுகாதார ஆய்வாளர்களிடம் இருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிப்பவர்கள், அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலமாக அனுப்ப வேண்டும். இதேபோல் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிப்பவர்கள் தங்களது விண்ணப்பங்களை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment