Thursday, 27 February 2014

சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கட்டணங்கள் ரத்து

சுயநிதி கல்லூரிகளில் அனைத்துவிதமான படிப்புகளிலும் படிக்கும் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு 2013-14 கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:
சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து சுயநிதி கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு அரசுக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களையும் 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் அரசே வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணங்கள் அனைத்தையும் "போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை' திட்டத்தின் கீழ் அரசே வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயின்று தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இந்தக் கல்வி கட்டணச் சலுகையை மறுக்கும் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment