சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில மாநாடு தீர்மானம் இயற்றியுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 12 வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் வெள்ளியன்று துவங்கியது. சனிக்கிழமை இரண்டாம் நாள் மாநாட்டில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்கி ஊதியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ரூ.3500 ஒய்வூதியம் வழங்க வேண்டும், அமைப்பாளர் மற்றும் சமையலருக்கும், உதவியாளருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி ஊதியம் வழங்க வேண்டும், தற்செயல் விடுப்பு 12 நாட்கள் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், தணிக்கை தடைகளை உரிய காலத்தில் நீக்காமல் இருபது ஆண்டுகளாக நிலுவையாக உள்ள தணிக்கை தடைகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் மாற்றுத் திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது போல், சத்துணவில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கிட வேண்டும், பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு ஆறு மாதம் வழங்கிட வேண்டும்.பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் : புதிய நிர்வாகிகளாக மாநில தலைவராக கே.பழனிச்சாமி, பொதுச் செயலாளராக டி.ஆர்.மேகநாதன், மாநிலப் பொருளாளராக பி.சுந்தரம்மாள், மாநிலச் செயலாளர்களாக பே.பேயத்தேவன், மு.வைத்தியநாதன், கு.சக்தி, எஸ்.சொர்ணம், ஆர்.அய்யம்மாள், கே.ஆண்டாள்மாநில துணைத் தலைவர்களாக சி.ராமநாதன், சொ.ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், க.துரை, ஆ,பெரியசாமி, விஜயகுமார், வ.சங்கரவடிவு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச்செயலாளர்மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் எம்.அல்போன்ஸ் நன்றி தெரிவித்தார்.
பேரணி : தொடர்ந்து மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறமிருந்து, பேருந்து நிலையம் வழியாக வேலூர் சாலை அண்ணா நுழைவு வாயில் வரை நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment