12ம் வகுப்புப் பொதுத் தேர்வு வினாத்தாள் விநியோகிப்பதில் இந்த வருடம் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது தேர்வு அறையில் மாணவர்கள் முன்பு வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு தேர்வு 3ம் தேதி தொடங்கி மார்ச் 25-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த வருடம் முதல் முதலாக மாணவ-மாணவிகள் தேர்வு பதிவு எண்ணை விடைத்தாளில் எழுதத்தேவை இல்லை. தேர்வு பதிவு எண் கொண்ட விடைத்தாள் அந்தந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். இதனால் மாணவர்களின் பதிவு எண் எந்த சூழ்நிலையிலும் மாறிப்போகாது. மேலும் மாணவர்களின் விடைத்தாள்களில் ரகசிய கோடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் எந்த ஒரு விடைத்தாளையும் யாரும் பின்தொடர முடியாது.
வழக்கமாக வினாத்தாள் கட்டு, தலைமை ஆசிரியர் அறையில் பிரிக்கப்பட்டு அவற்றை தேர்வு அறைகளுக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் எடுத்துச்செல்வார்கள். இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் ஒரு அறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே வினாத்தாள் 20 கொண்ட பார்சல்களாக கட்டப்படும். இந்த பார்சலை தேர்வு கண்காணிப்பாளர், தலைமை ஆசிரியர் அறையில் இருந்து எடுத்துச்சென்று தேர்வு அறையில் மாணவர்கள் முன்பாக பிரித்து மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்க உள்ளனர்.
இந்த புதிய முறை இந்த பிளஸ்-2 தேர்வுக்கு மட்டுமல்ல எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுக் கும் அமல்படுத்தப்பட உள்ளது.பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்த. சபீதா உத்தரவுப்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன், பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தேர்வுத்துறை இணை இயக்குனர்கள் ராஜராஜேஸ்வரி, ராமராஜன் ஆகியோர் தேர்வுக் கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இணை இயக்குனர்களும் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
No comments:
Post a Comment