Sunday, 2 March 2014

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு நாளை ஆரம்பம் : 8.26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்குகிறது. 8.26 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வை, சுமுகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத் துறை, முழுவீச்சில் செய்து முடித்து, தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில், 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 8.12 லட்சம் மாணவர்கள், 2,210 மையங்களில், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், மாணவர், 3 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர்; மாணவியர், 4 லட்சத்து 38 ஆயிரத்து 392 பேர். புதுச்சேரி மாநிலத்தில், 120 பள்ளிகளில் இருந்து, 13 ஆயிரத்து, 528 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 6,091 பேர் மாணவர்; 7,437 பேர் மாணவியர். 32 மையங்களில் தேர்வு நடக்கின்றன. தமிழகம், புதுச்சேரி இரண்டிலும் சேர்த்து, 8.26 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதுகின்றனர். 2,242 மையங்களில், தேர்வு நடக்கின்றன. கடந்த ஆண்டை விட, மாணவர், 8,838 பேரும், மாணவியர், 17,766 பேரும், கூடுதலாக எழுதுகின்றனர்.

சிறைவாசிகள் 58 பேர் : பள்ளி மாணவர்களுடன், தனித் தேர்வு மாணவர்கள், 53,629 பேரும், தேர்வை எழுதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சிறைவாசிகள், சிறையிலேயே தேர்வெழுத, அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு, சென்னை, புழல் சிறையில், 58 பேர், பிளஸ் 2 தேர்வை, தனித் தேர்வாக எழுதுகின்றனர்.

சிறப்பு மாணவர் நரம்பு சம்பந்தமான குறைபாடு உள்ள மாணவர், காது கேளாதோர், பார்வையற்றோர், பேச முடியாதோர் மற்றும் இதர உடல் குறைபாடு உடைய மாணவ, மாணவியர், 1,000 பேர், தேர்வை 
எழுதுகின் றனர். இவர்களுக்கு, மொழிப்பாடம் விலக்கு அளிப்பதுடன், தேர்வு நேரம், கூடுதலாக, ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது. மேலும், இவர்கள், தரை தளத்தில் தேர்வு எழுதும் வகையில், தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. 

பறக்கும் படை : மாநிலம் முழுவதும், 4,000 உறுப்பினர்கள் அடங்கிய, பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கல்வித் துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அடங்கிய ஒரு குழுவும், கணிதம், அறிவியல் போன்ற, முக்கிய பாடத் தேர்வுகளின்போது, அண்ணா பல்கலை ஆசிரியர் அடங்கிய குழு, மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழு உட்பட, பல்வேறு பறக்கும் படை குழுக்களும், தேர்வு மையங்களை பார்வையிட உள்ளன.

இயக்குனர் பேட்டி : தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறியதாவது: அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையங்களுக்கு, வினாத்தாளை, பாதுகாப்பாக கொண்டு செல்லவும், தேர்வு முடிந்த பின், விடைத்தாள் கட்டுகளை, குறிப்பிட்ட மையத்திற்கு கொண்டு செல்லவும், வாடகை கார்கள் மூலம், உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட, அனைத்து அடிப்படை வசதிகளும், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தேர்வை, எவ்வித புகாருக்கும் இடமின்றி, சுமுகமாக நடத்துவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, தேவராஜன் கூறினார்.

No comments:

Post a Comment