பத்தாம் வகுப்புத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 26) முதல் தொடங்குகிறது. தேர்வு கண்காணிப்புப் பணியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மற்றும் பயிற்சிகள் நடைபெற உள்ளதால், பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்புத் தேர்வு தமிழ் முதல் தாளுடன் மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 9-ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவு பெறுகிறது.
இந்தத் தேர்வை 11,552 பள்ளிகளிலிருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 பேர் எழுதுகின்றனர். மாணவர்கள் 5 லட்சத்து 30 ஆயிரத்து 462 பேர். மாணவிகள் 5 லட்சத்து 8 ஆயிரத்து 414 பேர்.
தனித்தேர்வர்களாக தேர்வு எழுத 74,647 பேர் பதிவு செய்துள்ளனர்.
பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 12,186 மாணவர்கள் குறைந்துள்ளனர்.
அதேநேரத்தில், இந்த ஆண்டு கூடுதலாக 176 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,179 தேர்வு மையங்கள் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாளை எடுத்துச்செல்வதற்கு வசதியாக புதிய தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அரசுப் பள்ளிகளுக்கே தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிóப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான நேரத்தை விட 45 நிமிஷங்கள் முன்னதாக காலை 9.15 மணிக்குத் தேர்வுகள் தொடங்கும்.
காலை 9.15 முதல் 9.25 வரை 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படிப்பதற்காகவும், விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் புகைப்படம், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க 5 நிமிஷங்களும் (காலை 9.25 முதல் 9.30 மணி வரை) அவகாசம் வழங்கப்படும்.
தேர்வு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.
விடைத்தாள் புத்தக பக்கங்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் சீலிடப்பட்ட உறையிலிருந்து மாணவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்பட்டு, விநியோகிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 3,179 தேர்வு மையங்களில் பள்ளிகளிலிருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 பேர் எழுதுகின்றனர்.
சென்னையில்...
சென்னையில் 588 பள்ளிகளிலிருந்து மொத்தம் 56,556 மாணவர்கள் 207 மையங்களில் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். இவர்களில் 27,943 பேர் மாணவர்கள், 28,613 பேர் மாணவிகள் ஆவர்.
புதுச்சேரியில்...
புதுச்சேரியில் 46 தேர்வு மையங்களில் 18,509 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 9,309 மாணவர்கள், 9,200 மாணவியர் ஆவர்.
119 சிறைவாசிகளும் எழுதுகின்றனர்:
பத்தாம் வகுப்புத் தேர்வை புழல் சிறையில் 45 சிறைவாசிகளும், திருச்சி மத்திய சிறையில் 74 சிறைவாசிகளும் எழுத உள்ளனர்.
இந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வு எழுதும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 430 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படையினர்:
பத்தாம் வகுப்புத் தேர்வில் முறைகேட்டைத் தடுப்பதற்காக, தேர்வு மையங்களை 5 ஆயிரம் பேர் கொண்ட கொண்ட கண்காணிப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணிப்பார்கள். ஒரு சில மையங்களில் கண்காணிப்புக் குழுவினர் தேர்வு ஆரம்பித்து முடியும் வரை, அங்கேயே இருந்து தேர்வுப் பணிகளைப் பார்வையிடுவர்.
தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் வசதியும் செய்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கற்றலில் குறைபாடு உள்ளவர்கள், கண்பார்வையற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், இதர உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோருக்கு தேர்வு எழுதும் நபர்களும் (ஸ்கிரைப்ஸ்), கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
யாரும் இருக்கக் கூடாது:
தேர்வு மையமாகச் செயல்படும் பள்ளிகளில் தேர்வு நேரங்களில் அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் யாரும் தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வில் ஒழுங்கீனச் செயல்கள் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, அவற்றை ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், அந்தப் பள்ளியின் தேர்வு மையம் ரத்து செய்யப்படும். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment