8¾ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதும் பிளஸ்–2 தேர்வு நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறையின் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
8¾ லட்சம் மாணவர்கள்
பிளஸ்–2 தேர்வு நாளை தொடங்கி மார்ச் 25–ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 6ஆயிரத்து 4 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 26 ஆயிரத்து 604 மாணவ–மாணவிகள் கூடுதலாக எழுதுகிறார்கள்.
8 லட்சத்து 26 ஆயிரத்து 117 பேர்களில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 288 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 45 ஆயிரத்து 829 பேர் மாணவிகள். மாணவர்களை விட 65 ஆயிரத்து 541 மாணவிகள் கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு எழுதுகிறார்கள்.
தேர்வு எழுத 2ஆயிரத்து 242 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 408 பள்ளிகளில் இருந்து 143 தேர்வு மையங்களில் 53 ஆயிரத்து 294 பேர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 24 ஆயிரத்து 570 பேர் மாணவர்கள். 28 ஆயிரத்து 724 பேர் மாணவிகள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவர்களை தவிர தனித்தேர்வர்கள் 53 ஆயிரத்து 629 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
சிறைவாசிகள்
சென்னை புழல் சிறையில் 58 சிறை வாசிகள் பிளஸ்–2 தேர்வை எழுத உள்ளனர். மனவளர்ச்சி குன்றியவர்கள்,பார்வையற்றோர், காதுகேளாதவர்கள், பேசமுடியாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு, கூடுதல் ஒரு மணிநேரம், போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
தமிழ்வழியில் தேர்வு எழுதும் அனைத்து பிளஸ்–2 மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது. அந்தவகையில் இந்த ஆண்டு தமிழ் வழியில் 5 லட்சத்து 45 ஆயிரத்து 771 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
ஜெயலலிதா உத்தரவுப்படி
முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடைமுறைகளை இந்த ஆண்டு தேர்வுத்துறையால் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடை எழுதுவதற்கு உரிய விடைத்தாள் வழங்கியபின்னர், விடைத்தாளில் பூர்த்தி செய்யவேண்டிய தேர்வரின் பதிவு எண் முதலான விவரங்களை பதட்டத்தின் காரணமாக தவறான பதிவு எண்களை எழுதுவதால் தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மாணவரின் புகைப்படம், பதிவெண், எந்த பாடத்தின் தேர்வு முதலான விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டை விடைத்தாளுடன் இணைத்தே வழங்குகிறது. தேர்வர் முகப்பு சீட்டில் அச்சிடப்பட்ட விவரங்களை சரிபார்த்து கையெழுத்திடவேண்டும்.
தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேள்வித்தாள் பாதுகாப்பு மையத்தில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
முதன்மை விடைத்தாளின் பக்கங்களை அதிகரித்துள்ளதால் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுகிறது.
வினாத்தாளின் ரகசியத்தை முழுமையாக காக்கும் வகையில் 20 வினாத்தாள் என்ற எண்ணிக்கையில் உள்ள ‘சீல்’ இடப்பட்ட உறை, தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும். தேர்வு அறையில் 2 மாணவர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட பின் தேர்வர்களின் முன்னிலையில் வினாத்தாள் உறை பிரிக்கப்பட்டு வினாத்தாள் விநியோகிக்கப்படும்.
வினாத்தாள் கொண்டு செல்லும் முறை
வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்புக்காகவும் உரிய நேரத்திற்குள் தேர்வு மையங்களை சென்று அடையும் வகையில், வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து கார்களில் அல்லது வேன்களில் அந்தந்த பகுதியில் உள்ள பாதைகள் நன்றாக தெரிந்த அலுவலர் மூலம் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அந்த காரில் ஒரு போலீஸ்காரர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர்ஆகியோர் இருப்பார்கள்.
தேர்வு அறையில் மாணவர்களின் மனஇறுக்கத்தை போக்கி விடைகளை திட்டமிட்டு தேர்வுகளை நன்றாக எழுதுவதற்காக வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கிய பின்னர் அதை முழுமையாக படிக்க 10நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது.
விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்பு படிவத்தில் அச்சிடப்பட்ட மாணவர்களின் புகைப்படம், பதிவெண், விவரங்களை மாணவர்கள் சரிபார்த்துக்கொள்ள 5 நிமிடம் வழங்கப்படுகிறது.
ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
தேர்வு எழுதும்போது ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், அந்த தேர்வு மையத்தை ரத்து செய்தும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆள் மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில் மாணவர்களின் புகைப்படம் விடைத்தாளிலும், ஹால்டிக்கெட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வில் பகுதி –3ல் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ஒரே வினாத்தாளில் இடம் பெற்றுள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்படும்.
அந்த வினாத்தாள்களில் தமிழ் மற்றும் ஆங்கில வினாக்கள் இடம் பெறும்.
தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அந்த பள்ளியைச்சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், அடிப்படை ஊழியர்கள் யாரும் அந்தந்த பள்ளியில் இருக்கக்கூடாது. வேறு பள்ளியில் இருந்துதான் தேர்வு நடத்த ஆசிரியர்கள் வருவார்கள்.
தேர்வு மையங்களில் குடிநீர்வசதி, கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வை எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க அனைத்து கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தக்க அறிவுரை வழங்கி உள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment