"தமிழகத்திற்கு, ஒரே கட்டமாக, தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் சூசகமாக தெரிவித்தார். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில், 32 தொகுதிகளுக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 தொகுதிகளுக்கு...: மீதமுள்ள ஏழு தொகுதிகளுக்கு, தேர்தல் அதிகாரியாக, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பங்கேற்ற கூட்டம், சென்னையில், நேற்று, தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தலைமையில் நடந்தது. தேர்தலை அமைதியாக நடத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது, தேர்தலில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, குழுக்கள் அமைப்பது குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பிரவீண்குமார் கூறியதாவது: "ஓட்டு போட பணம் வாங்கக் கூடாது. பணம் அல்லது பரிசுப் பொருள் வாங்கினால், உங்கள் உரிமையை, ஐந்து ஆண்டுகளுக்கு, விற்றதாகி விடும். பணம் வாங்கிய பிறகு, வெற்றி பெற்றவர்களிடம், "தொகுதிக்கு சாலை போடுங்கள், குடிநீர் வசதி செய்யுங்கள்' என, கேட்க முடியாது. அவர்கள் பணம் கொடுத்து தானே, ஓட்டு பெற்றோம் என்பர். எனவே, ஓட்டை விற்காதீர்' என, மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம். தமிழகத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, தலைமை தேர்தல் கமிஷனுக்கு, பரிந்துரை செய்துள்ளோம்.
பேனர் வைக்கக்கூடாது : எனவே, ஒரே கட்டமாக, தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்காக, நகர் பகுதிகளில், அரசு மற்றும் தனியார் இடங்களில், விளம்பரம் செய்யக் கூடாது; பேனர் வைக்கக் கூடாது. கிராமப்புறங்களில், தனியார் இடத்தில், அனுமதி பெற்று, விளம்பரம் செய்யலாம்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பொது இடங்களில், அரசியல் தலைவர்களின் படம் மற்றும் அரசியல் கட்சி சின்னம் இருந்தால், மறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment