Saturday, 1 March 2014

பள்ளி மாணவி பலாத்காரம் ஆசிரியர் "சஸ்பெண்ட்'


பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், சப்பையாபுரம் அரசு உயர் நிலை பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர், அருண்குமார், 27. கடந்த டிசம்பரில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், தலா ஒரு மாணவர், மாணவியரை, நாமக்கல் தனியார் கல்லூரியில் நடந்த கருத்தரங்குக்கு அழைத்துச் சென்றார். கருத்தரங்கு முடிந்ததும், மாணவியை மட்டும், கொசம்வம்பட்டியில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி, இரண்டு மாதமாக பள்ளிக்கு செல்லாமல், அடிக்கடி விடுப்பு எடுத்துள்ளார்.

புகார் : மாணவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் விசாரித்தனர். ஆசிரியர் அருண்குமார், தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியர் அனுசுயாவிடம் புகார் செய்தனர். அவர் நடவடிக்கை எடுக்காமல், ஆசிரியருக்கு ஆதரவாக பேசவே, மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில், புகார் செய்யப்பட்டது. புகாரின்படி, குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நேற்று முன்தினம், பள்ளியில் விசாரணை நடத்தினர்.
தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். பின், ஆசிரியர் அருண்குமாரை, போலீசில் ஒப்படைத்தனர். அருண்குமாரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் அருண்குமார் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, பள்ளித் தலைமையாசிரியர் அனுசுயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமாரிடம், முதற்கட்ட அறிக்கையை வழங்கினார்.
அதன் அடிப்படையில், ஆசிரியர் அருண்குமாரை, சி.இ.ஓ., குமார், "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

"டிஸ்மிஸ்' : "இது தொடர்பான அறிக்கை, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2012ல், வடுகப்பட்ட ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சத்யபிரபு, "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment