Wednesday, 26 March 2014

தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்

இன்று துவங்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

8:00 மணிக்கு 'அட்டெண்டன்ஸ்':


தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. 7.31 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். குளறுபடிகள் இன்றி, தேர்வை நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. காலை, 9:15 மணிக்கே, தேர்வு துவங்குவதால், முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர், அவரவர் தேர்வு மையத்துக்கு, காலை, 7:30 மணிக்கு சென்று விட வேண்டும். 8:00 மணிக்கு, வருகை பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும். முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் வினாத்தாள் பெறப்படும் நேரம், விடைத்தாள் ஒப்படைக்கும் நேரத்தை, அதற்கான பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். தேர்வு நடக்காத அறைகளை, பூட்டிவிட வேண்டும். வழித்தட அலுவலர்களாக பணியாற்றுவோர், அவர்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்த கூடாது. மாவட்ட தேர்வுத்துறை ஏற்பாடு செய்யும், தனியார் வேன்களை பயன்படுத்த வேண்டும். வாகனங்களில் பழுது ஏற்பட்டால், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தர வேண்டும். தேர்வு நாட்களில், அந்த பாடத்தை நடத்தும் ஆசிரியர், அறை கண்காணிப்பாளராகவோ அல்லது பறக்கும்படை உறுப்பினர்களாகவோ இருக்க கூடாது. உதாரணமாக, தமிழ் தேர்வு நாளில், தமிழாசிரியர், எப்பொறுப்பிலும் பணியமர்த்தக் கூடாது.

தலைமையாசிரியருக்கு இல்லை:


அத்தகைய ஆசிரியர்களுக்கு, அன்றைய தினம், விடுப்பு கொடுத்து விட வேண்டும். ஆனால், முதன்மை கண்காணிப்பாளராக இருக்கும், தலைமை ஆசிரியர் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு, கடந்த, 25ல் நிறைவடைந்துள்ளது.

No comments:

Post a Comment