Monday, 31 March 2014

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

கோவை லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியாற்றவுள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
கோவை தெற்கு தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நிர்மலா கல்லுாரியிலும்; சிங்காநல்லுார் தொகுதிக்கு பெர்க்ஸ் பள்ளியிலும்; கோவை வடக்கு தொகுதிக்கு கிக்கானி பள்ளியிலும்; கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சி.எம்.எஸ்., பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது.
ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலர் ஒருவர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மூன்று பேர் பணியமர்த்தப்படுகின்றனர். ஓட்டுச்சாவடியில் மொத்தம் நான்கு பேர் பணியில் இருப்பர். ஒவ்வொரு தொகுதிக்கும் ௨௦ சதவீதம் அலுவலர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டு பயற்சி கொடுக்கப்படுகிறது.ஓட்டுப்பதிவு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது பற்றி, வீடியோ காட்சிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின், செயல்விளக்கமளித்து, மாதிரி ஓட்டுப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் தெரிவித்த தகவல் வருமாறு:
தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபடுவர். ஒட்டுச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பேலட் பேப்பர்கள் உள்ளிட்ட ௮௬ வகையான ஓட்டுப்பதிவு உபகரணங்கள், மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒப்படைப்பார்கள். ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலர் அவற்றை பெற்று, பாதுகாக்க வேண்டும். மின்னணு இயந்திரங்களில் கோளாறு இருந்தால், உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்தலன்று, ஓட்டுப்பதிவு துவங்கும் முன், வேட்பாளர்களின் பூத் ஏஜன்ட்டுகள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். பூத் ஏஜன்ட்களிடம் படிவங்களில் கையெழுத்து பெற்று, மின்னணு இயந்திரத்துக்கு 'சீல்' வைக்க வேண்டும். அதன்பின், எக்காரணம் கொண்டும், 'சீல்' அகற்றக்கூடாது. மின்னணு இயந்திரம் செயலிழந்து விட்டால், ஓட்டுப்பதிவை நிறுத்தம் செய்து, உடனடியாக மாற்று இயந்திரம் பெற்று, அதையும் வழக்கமான 'சோதனைகள்' செய்து, ஓட்டுப்பதிவை தொடர வேண்டும். வாக்காளர் பட்டியல், படிவங்கள், விரலில் மை வைப்பது போன்ற பணிகளை ஒட்டுப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அலுவலர்களுக்கு தேவையான காலை, மதிய, இரவு உணவை சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். கட்சியினரிடம் இருந்து உணவு, குடிநீர், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனி பெறுவது சட்டப்படி குற்றம். ஓட்டுப்பதிவின்போது தகராறு, பிரச்னை செய்வோரையும், கள்ளஓட்டு போடுவோரை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடிக்குள் தகராறு செய்பவரையும், யாருக்கு ஓட்டுப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தவரையும், 'ஓட்டளிக்க மறுக்கப்படுகிறது' என, பதிவு செய்து வெளியேற்ற வேண்டும்.
ஓட்டுப்போட வாக்காளர் வரும்போது, பூத் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தால், 'சேலஞ்ச்' ஓட்டு பதிவு செய்யலாம். அதற்கு 'பூத் ஏஜன்டிடம்' 2௦ ரூபாய் பணம் பெற்று, ஓட்டுப்போடுபவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆவணம் சரியாக இருந்தால் ஓட்டளிக்க அனுமதிக்கலாம். சேலஞ்ச் ஓட்டு பதிவு செய்யப்பட்டால், 2௦ ரூபாய் அரசுக்கு சொந்தம்; சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், 20 ரூபாயை பூத் ஏஜன்ட்டிடம் திரும்ப கொடுத்து, ஓட்டு போட 
முயன்றவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.
சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட் பேப்பரில்' முத்திரை வைத்து ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும். கண் பார்வையற்றோர் ஓட்டளிக்க வந்தால், அவருக்கு உதவியாக ஒருவரை அனுமதிக்க வேண்டும். மின்னணு இயந்திரம் இருக்கும் இடத்திற்கு கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் '௧௭ சி'யில் பதிவு செய்ய வேண்டும். மின்னணு இயந்திரத்தை, மண்டல தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் வரையிலும், ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலரே பொறுப்பாளர் ஆவார். ஓட்டுப்பதிவு தவறுகள் நடந்தால், ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அந்தந்த சட்டசபை தொகுதிக்குள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அவர்களுக்கு வழங்கியுள்ள 'யுனிகோடு' எண்களை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம். வேறு தொகுதியில் தேர்தல் பணியமர்த்தப்பட்டால், தபால் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment