போட்டி நிறைந்த இந்த காலகட்டத்தில், மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி அவசியம். தொழில் ரீதியாக உள்ள கல்வி நிலையங்களில், அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இதைத் தவிர்க்க வேண்டும்,'' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். "சி.பி.எஸ்.இ., பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, "கோச்சிங் சென்டர்'களை, பள்ளி வளாகத்தில் நடத்தக்கூடாது' என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ., அனுமதி : மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) செயலர், ஜோசப் இமானுவேல், இதற்கான சுற்றறிக்கையை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளார்.
அதில், "பல சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு, பயிற்சி அளிக்கப்படுவதாக புகார் வந்துள்ளன. பள்ளி களில், பாடங்களுக்கு தொடர்பு இல்லாத, இதர பயிற்சி நிலையங்களை நடத்த, சி.பி.எஸ்.இ., அனுமதி வழங்கவில்லை. எனவே, இதுபோன்ற செயல்பாடுகளை, பள்ளி நிர்வாகங்கள், உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லை எனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்து உள்ளார். சென்னை நகரில் உள்ள, பல முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அந்த பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல், இதர பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சேர்த்து, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு பயிற்சியை வழங்கி வருகின்றன.கடந்த சில ஆண்டுகளாக, இது போன்ற பயிற்சி மையங்கள், வணிகரீதியாக நடத்தப்படுவதாக, புகார்கள் எழுந்தன. இதன் காரணமாகவே, சி.பி.எஸ்.இ., நடவடிக்கை எடுத்துள்ளது.
தவறு இல்லை : இது குறித்து, சி.பி.எஸ்.இ., குழும பள்ளி ஒன்றின், முன்னாள் முதல்வர், வெங்கடாசல பாண்டியன் கூறியதாவது: பள்ளியின், வழக்கமான பாட வேளைகளுக்கு பாதிப்பு இல்லாமலும், பயிற்சியில் சேராத இதர மாணவர்களுக்கு, பாதிப்பு இல்லாமலும், உயர்கல்வியில் சேர்வதற்கான பயிற்சியை அளிப்பதில், தவறு இல்லை. அதே நேரத்தில், வணிக நோக்கத்துடன், தன் பள்ளி மாணவர்கள் மட்டும் இல்லாமல், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சேர்த்து, பயிற்சி அளிப்பது தவறு.
போட்டி நிறைந்த இந்த காலகட்டத்தில், மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அவசியம். தொழில் ரீதியாக உள்ள கல்வி நிலையங்களில், அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சியில், கட்டணம் குறைவாக இருக்கும். இதன் காரணமாகவும், மாணவர்கள், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கின்றனர். அதே நேரத்தில், சி.பி.எஸ்.இ., உத்தரவை கடைபிடிக்க வேண்டியது, பள்ளிகளின் கடமை. இவ்வாறு, வெங்கடாசல பாண்டியன் தெரிவித்தார். இவர் கருத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளியில் பணியாற்றி, ஓய்வுபெற்ற வேறு சிலரும் ஆமோதித்தனர்.
உத்தரவு சரியானது தான்! : சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான பயிற்சியை மட்டும், பள்ளிகளில் வழங்கினால் பரவாயில்லை. ஆனால், வங்கி பணிகளுக்கான பயிற்சி, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி உட்பட, பல தேர்வு களுக்கான பயிற்சிகளும், பள்ளி வளாகங்களில் நடத்தப்படுகின்றன. பயிற்சி ஆசிரியர்களுடன், பள்ளி நிர்வாகம் உடன்பாடு செய்துகொண்டு, பல லட்சங்களை சம்பாதிக்கும் நோக்கில், பள்ளி வளாகத்தை, தவறாகப் பயன்படுத்துகின்றன. எனவே, இதை முறைப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., நடவடிக்கை எடுத்திருப்பது, வரவேற்க்கதக்கது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். சி.பி.எஸ்.இ., உத்தரவு போட்டாலும், அதை, பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிக்குமா என்பது கேள்விக்குறி தான்.
No comments:
Post a Comment