Wednesday, 9 April 2014

10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் : தேர்வுத்துறை விசாரணை


திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு மையத்தில் நடந்த ஆள் மாறாட்டம் குறித்து தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. 
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். மொழித் தாள்கள், கணக்கு பாடங்களுக்கான தேர்வுகள் 4ம் தேதியுடன் முடிந்தன. அறிவியல் பாட தேர்வு நேற்று நடந்தது. இன்று ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு, நாளை சமூக அறிவியல் பாட தேர்வு நடக்கிறது. அத்துடன் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிகின்றன. நேற்று நடந்த 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வி தாளில், கேள்வி எண் 14, கேள்வி எண் 29 ஆகியவை குழப்பமாக கேட்கப்பட்டதால் மாணவர்கள் விடை எழுத சிரமப்பட்டனர். இதையடுத்து மேற்கண்ட 2 கேள்விகளுக்கும் உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மாணவர்கள், 

பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் ஒரு மாணவருக்கு பதில் அவருடைய பெயர் கொண்ட வேறு ஒரு மாணவர் மொழிப் பாட தேர்வுகளை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு மைய கண்காணிப்பாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு நேரில் அழைக்கப்பட்டனர். அவர்களிடம் தேர்வு துறை இயக்குநர் தேவராஜன் விசாரணை நடத்தினார். அப்போது, மொழிப் பாட தேர்வின் போது, மைய கண்காணிப்பாளர்கள் கவனக்குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தேர்வு  முடியும் வரை பணியில் இருந்து கண்காணிப்பாளர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment