வரும் மக்களவை தேர்தலுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை முழு ஆய்வு நடத்த 33 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் அனுமதி (பெர்மிட்) ரத்து செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மாணவர்கள் வசதியாக வந்து செல்லும் வகையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா, அரசு அறிவித்திருந்த பெற்றோர், ஆசிரியர் அடங்கிய கமிட்டி முழுமையாக செயல்படுகிறதா என்பதை ஆராய வேண்டுமென பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மொத்தம் 36,389 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு நடத்தவுள்ளோம். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும், சில இடங்களில் வாகனங்களை வரவழைத்தும் முழுமையாக ஆய்வு நடத்தப்படும். வரும் மக்களவை தேர்தல் முடிந்த பிறகு இப்பணிகள் நடைபெறும்.
குறிப்பாக வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இதற்காக 33 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் 2 வாகன ஆய்வாளர்கள் இருப்பார்கள். வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், தகுதிச் சான்று (எப்.சி) அளிக்கப்படமாட்டாது. மேலும், பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், பள்ளிகளில் அரசு அமைத்திருந்த பெற்றோர், ஆசிரியர் கமிட்டி செயல்பாடுகள், மாவட்ட போக்குவரத்து கமிட்டி செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்” என்று அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment