அரசு அங்கீகாரம் பெறாத 723 நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதோடு, இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகளும், 6,278 தனியார் தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.
அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கக் கல்வித் துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 1,296 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டது.
இதில் 723 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்தப் பள்ளிகளில் வரும் 2014-15 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் ஏப்ரல் இறுதியிலோ, மே முதல் வாரத்திலோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment