நாகை மாவட்டம், சீர்காழி, கோவில்பத்து நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியின் வாக்குச் சாவடி அலுவலர், கண் பார்வையற்றவர்கள் மற்றும் முதியவர்கள் விருப்பம் தெரிவிக்கும் சின்னத்தில் வாக்களிக்காமல், மாற்று சின்னத்துக்கு வாக்களிப்பதாக வியாழக்கிழமை காலை சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியினரின் ஏற்பாட்டில், மன்சூர்அலி(51)என்பவர் (கண்பார்வைக் கொண்டவர்) தனக்குக் கண்பார்வை சரியில்லை எனக் கூறி, வாக்குச் சாவடி அலுவலர் ராஜேந்திரனை அணுகி தான் வாக்களிக்க விரும்பும் சின்னத்தைத் தெரிவித்துள்ளார்.
அப்போது, மன்சூர்அலி குறிப்பிட்ட சின்னத்தில் வாக்களிக்காமல், வாக்குச் சாவடி அலுவலர் ராஜேந்திரன் வேறொரு சின்னத்தில் வாக்கைப் பதிவு செய்தாராம். அப்போது, மன்சூர்அலி வாக்குச் சாவடி அலுவலர் தனது வாக்கை மாற்றிப் பதிவு செய்ததை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால், அந்த வாக்குச் சாவடியிலிருந்த அரசியல் கட்சி முகவர்களுக்கும், வாக்குச் சாவடி அலுவலர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்துத் தகவலறிந்த தேர்தல் பணி அலுவலர்கள், ராஜேந்திரனை அந்த வாக்குச் சாவடி பணியிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக எழிலரசன் என்பவரை வாக்குச் சாவடியில் பணியமர்த்தினர். அதன் பின்னர், அங்கு அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது.
No comments:
Post a Comment