கல்வி வியாபாரமாகி, இப்போது பெருவணிகமாக மாறிக்கொண்டிருக்கிறது. உயர்கல்விக்கு பணத்தை கொட்ட வேண்டியிருக்கிறது. அந்த நிலை பள்ளிகளுக்கும் வந்துவிட்டது. மழலைப் பள்ளியில் சேர்க்கவே லட்சங்களில் இறைக்க வேண்டிய நிலை இருக்கிறது. பணமிருந்தால்தான் உரிய கல்வியும் இடமும் கிடைக்கும் என்கிற நிலை வருவது ஆரோக்கியமானதல்ல. பெற்றோரின் மனப்போக்கும் இச்சூழல் வளர்வதற்கு ஏதுவாக இருக்கிறது. என்ன விலை கொடுத்தாவது குறிப்பிட்ட பள்ளி, கல்லூரியில் சேர்க்க துடிக்கிறார்கள். அதை தங்களது கவுரவ சின்னமாக கருதுகிறார்கள். இந்த வேட்கையை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு கல்லாவை நிரப்புகின்றன. நிறுவனப் பெயரை நிலைநாட்டி, வருமானத்தை பெருக்குவதற்காக மதிப்பெண் உருவாக்கும் பண்ணைகளாக பள்ளிகளை மாற்றிவிட்டனர்.
இயந்திரகதியிலான இத்தன்மை, மாணவர்களின் இயல்பான படைப்புத்திறனை நசுக்குகிறது. அவர்களின் தனித்துவ ஆற்றலை மங்கிப் போகச் செய்கிறது. இதை உணர்ந்துதான் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்ட விதிகளின்படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வாங்கக்கூடாது. நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. அறிவுத்திறன் சோதிக்கிறோம் என்ற பெயரில் நேர்காணல் வைக்கக்கூடாது. ஆனால் இந்த விதிகள் எதையும் பள்ளிகள் சட்டை செய்வதே இல்லை.
மே மாதத்தில்தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆண்டின் தொடக்கத்திலேயே விண்ணப்பங்களை வழங்கி, மாணவர் சேர்க்கையை தொடங்கி, நடத்தி முடித்தும்விட்டன.
தனியார் பள்ளிகளின் இதுபோன்ற விதிமீறல்களை இப்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தொடங்கிவிட்டன. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று, மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வை நடத்தியிருக்கிறது. 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கத்தான் 3 மணி நேரம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து கல்வித் துறைக்கு தகவல் கிடைத்து, முதன்மை கல்வி அதிகாரி அப்பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பல பள்ளிகளில் பாடங்களை சரிவர எடுப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. வீட்டில் படித்துக் கொள்ளுங்கள், பெற்றோரை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் என்று மாணவர்களை அறிவுறுத்துகின்றனர்.
கிரகிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவனுக்கும் உரிய முறையில் பாடம் நடத்தி, அவனது உயர்வுக்கு உதவுவதுதான் ஆசிரியர்களின் கடமை. திறமை மிக்க மாணவர்களை மட்டும் நுழைவுத்தேர்வின் மூலம் பொறுக்கி எடுத்து, அவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதில் என்ன இருக்கிறது. பள்ளியின் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் பெருமையை காட்டுவதை மட்டும் இலக்காக வைத்து செயல்படுவதே இதற்கு காரணம். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே அந்த சூழலை உருவாக்க முடியும்.
No comments:
Post a Comment