தமிழகத்தில், முதன் முறையாக, சோதனை அடிப்படையில், மத்திய சென்னை தொகுதியில் மட்டும், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி, ஏற்படுத்தப்பட உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் விடுத்துள்ள அறிக்கை: தேர்தல் கமிஷன், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு, ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும், வசதியை (voters verifiable paper audit trial system) ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், முதன் முறையாக, நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலில், மதுரை, சென்னை தொகுதியில், சோதனை அடிப்படையில், இவ்வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இத்தொகுதியில் உள்ள, 1,153 ஓட்டுச் சாவடிகளிலும், இவ்வசதி ஏற்படுத்தப்படும். இங்குள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு, ஓட்டு போடுகின்றனரோ, அந்த சின்னம், அருகில் உள்ள கண்ணாடியில், சில வினாடிகள் தெரியும். அதன்பின் அந்த சின்னம் அச்சாகி, இயந்திரத்திலே இருக்கும்; கையில் ஒப்புகை சீட்டு எதுவும் வராது. இதன் மூலம், ஒவ்வொரு வாக்காளரும், சரியான சின்னத்திற்கு, ஓட்டு போட்டோமோ என்பதை அறிந்து கொள்ள முடியும். இவ்வசதி ஏற்படுத்தப்பட்ட, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, எவ்வாறு இயக்க வேண்டும் என, அங்குள்ள ஓட்டுச்சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில், தி.மு.க., சார்பில் தயாநிதி, அ.தி.மு.க., சார்பில், விஜயகுமார், தே.மு.தி.க., சார்பில் ரவீந்திரன், ஆம் ஆத்மி சார்பில், பிரபாகர், காங்கிரஸ் சார்பில், மெய்யப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதிய இயந்திரங்கள் வருகை : வாக்காளர்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளோம் என்பதை, அறிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய இயந்திரம், முதன் முறையாக, நாகாலாந்து மாநில தேர்தலில், கடந்த செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், 20 ஆயிரம் புதிய இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, சோதனை அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில், பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில், மத்திய சென்னை தொகுதியில், இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக, புதிய இயந்திரங்கள், நேற்று, சென்னை கொண்டு வரப்பட்டு, புளியந்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment