கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிந்து விட்டது. 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு தற்போது தேர்வுகள் நடந்து வருகின்றன.
இவர்களுக்கு இம்மாதம் 23ம் தேதி முதல் கோடைவிடுமுறை அளிக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் வரும் 21ம் தேதி தேர்வுகள் தொடங்கி இம்மாத இறுதிவரை நடைபெறுகிறது. அதன் பிறகே கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் வருகிற ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிய கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸையும் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்றுத் தருவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை விடுமுறை தினங்களிலேயே பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
பின்னர் அதிகாரிகளிடம் இருந்து இலவச பஸ் பாஸ் பெற்று பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ம் தேதி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது தேர்வுகள் முடிவுறும் நிலையில் உள்ளது. ஏற்கனவே 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடுமுறையில் சென்று விட்டதால் அவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி பூர்த்தி செய்து கையெழுத்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் இவற்றை எப்படி செய்வது என்பது குறித்து கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் ஆலோசித்து வருகின்றனர். இது போல் இலவச பஸ் பாஸை மே மாதமே தயாரித்து வழங்க வேண்டிய கட்டாயம் போக்குவரத்து துறைக்கும் ஏற்பட்டுள்ளது.
இதை எவ்வாறு செயல்டுத்துவது என்பது குறித்து அவர்களும் ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment