தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவுத் துறை "வெப்சைட்'டில், பொதுத்தேர்வு எழுதிய மாணவரின் தேர்வு முடிவு இணைக்கப்படுவதால், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரே மாதிரியான "சீனியாரிட்டி' பின்பற்றப்படுகிறது. அவ்வாறில்லாமல், "பிரவுசிங் சென்டர்'களில் வேலைவாய்ப்பு பதிவு செய்தால், மாணவரின் "சீனியாரிட்டி' தேதியில், மாற்றம் ஏற்படும்' என, வேலைவாய்ப்பு அதிகாரி கள் தெரிவித்தனர்.
"ஆன் - லைன்' : தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு, மே 23ம் தேதியும் வெளியாகிறது. இரண்டு ஆண்டுக்கு முன், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று, வேலைவாய்ப்பு பதிவு செய்து வந்தனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கூட்ட நெரிசல், அலைக்கழிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், பலர் பொதுத்தேர்வு முடிவுகளை பதிவு செய்யவில்லை. இந்நிலையில், தேர்வுத் துறையும், வேலைவாய்ப்பு துறையும் இணைந்து, பொதுத்தேர்வு மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை, அந்தந்த பள்ளிகள் மூலமாக, "ஆன் - -லைனில்' பதிவு செய்யும் முறையை அமல்படுத்தின. தற்போது, பொதுத்தேர்வு முடிவுகளை, வேலைவாய்ப்பு துறை வெப்சைட்டில், தேர்வுத் துறை இணைக்க உள்ளது. அதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் பிரத்யோகமான அடையாள, ரகசிய வார்த்தைகள் கொடுக்கப்பட உள்ளது. அதில், ஒவ்வொரு மாணவருக்கும், தேர்வுத் துறை வழங்கிய எண்ணை பதிவு செய்தால், மாணவரின் முழுவிவரங்களும் தெரிந்துவிடும். அதைக்கொண்டு, நடப்பு தேர்வு முடிவு, பள்ளிகள் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும்.
"சீனியாரிட்டி' : மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், மாணவரின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்று, இருப்பரிமாண பட்டக் குறியீடு, கூடுதல் ரகசிய குறியீடுடன் சான்று வழங்கப்படும். தேர்ச்சியடைந்த மாணவர்களின் தேர்வு முடிவு, வேலைவாய்ப்பு பதிவுத் துறையுடன் இணைக்கப்படும். மாணவர் படித்த பள்ளியிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு, அட்டை வழங்கப்படும். தேர்வு முடிவு வெளியிட்ட தேதியை கணக்கில் கொண்டு, தொடர்ந்து 10 நாட்களுக்கு, ஒரே மாதிரியான சீனியாரிட்டி தான் பின்பற்றப்படும். "பிரவுசிங் சென்டர்'களில் வேலைவாய்ப்பு பதிவு செய்தால், எந்த நாளில் பதிவு செய்தாரோ, அந்த நாளில் தான் "சீனியாரிட்டி' எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே, தேர்ச்சியடைந்த மாணவர்கள், கண்டிப்பாக அந்தந்த பள்ளி அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரில் சென்று, தங்களது வேலைவாய்ப்பை பதிவு செய்து கொள்ள வேண்டும். நடப்பாண்டு, தேர்ச்சியான, 100 சதவீத மாணவரின் வேலைவாய்ப்பு பதிவு செய்ய, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment