Saturday, 24 May 2014

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 10 மணிக்கு முன்பே வெளியிட்ட பள்ளிகள்


தமிழக கல்வித் துறை இயக்குநரகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் கல்வித்துறை இயக்குநரால் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் இணையதளத்திலும் வெளியானது.

பொதுவாக தேர்வு முடிவுகள் அடங்கிய பெட்டிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் காலை 8 மணிக்கே வழங்கப்பட்டு விடும். அரசு முடிவுகளை வெளியிட்ட பிறகு தான் அனைத்துப் பள்ளிகளும் தங்களுக்கான பெட்டிகளை பிரித்து வெளியிட வேண்டும்.

ஆனால், சில தனியார் பள்ளிகள் காலை 8.30 மணிக்கே தங்களுக்கு வழங்கப்பட்ட கவர்களை பிரித்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விவரம் முன்கூட்டியே தெரிய வந்தது. இதேபோல 2 வாரங்களுக்கு முன்பு வெளியான +2 தேர்வு முடிவுகளும் இப்பள்ளிகளில் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment