Thursday, 1 May 2014

நாளை முதல் 15–ந் தேதி வரை 8–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


8–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளை முதல் 15–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கோவை மண்டல துணை இயக்குனர் அறிவித்து உள்ளார்.

8–ம் வகுப்பு பொதுத்தேர்வு

இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் லூர்து சகாயராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அரசு தேர்வுகள் துறை சார்பில், தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் 1.5.2014 அன்று 12½ வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதன்படி அரசு விடுமுறை நாட்களை தவிர, அனைத்து நாட்களிலும் நாளை(2–ந் தேதி) முதல் 15–ந் தேதி வரை, www.tndge.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டும் வகையில், மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன்படி கோவை மாவட்டத்தில் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் மரவனேரி பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி மாவட்டத்தில் லக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8மையங்கள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்

தேர்வு கட்டணம் ரூ.125 ஆகும். இணையதள விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.50 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் ரூ.40–க்கான தபால் தலை ஒட்டப்பட்ட, சுய முகவரி எழுதப்பட்ட உறை ஒன்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment