Sunday, 25 May 2014

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு


தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

இதுவரை 27,966 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் கடந்த புதன்கிழமை (மே 14) தொடங்கியது. இதுவரை மொத்தம் 27,966 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். விண்ணப்ப விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (மே 25) கிடையாது.

ஜூன் 2 கடைசி: விண்ணப்பங்களைப் பெற மே 30-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி நாள் ஜூன் 2-ஆம் தேதியாகும். இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளன.

ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்களில் பலர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். மறு மதிப்பீட்டுக்குப் பிறகு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை ஜூன் 10-ஆம் தேதிக்குள் அளிப்பதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் மறு மதிப்பீடு மதிப்பெண்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் கிடைத்து விட்டால், ஜூன் 12-ஆம் தேதி எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment