
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 94.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
94.36 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார், பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:–
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை மொத்தம் 31 ஆயிரத்து 401 மாணவ–மாணவிகள் எழுதினர். இதில் 29 ஆயிரத்து 629 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.36 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 93.78 சதவீதமாகும். இந்த ஆண்டு 0.58 சதவீதம் அதிகரித்துள்ளது.
64 பள்ளிகள் நூறு சதவீதம்
பிளஸ்–2 தேர்வை தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற அரசு சார்பில் நடத்தப்பட்ட வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த பள்ளிகளையும், மாணவர்களையும் கண்டறிந்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மாலை நேரங்களில் வாழைப்பழம், சுண்டல் போன்ற உணவு வகைகள் கொடுக்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டம் முழுவதும் 213 மேல்நிலைப்பள்ளிகளில் 64 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 6 அரசு பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் பள்ளி, 15 அரசு உதவி பெறும் பள்ளிகள், 10 சுயநிதி பள்ளிகள், 30 மெட்ரிக் பள்ளிகள், புத்தூர் பார்வையற்றோர் பள்ளி மற்றும் ஒரு மாநகராட்சி பள்ளியும் அடங்கும்.
நடவடிக்கை
ஆமூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 68 பேர் தேர்வு எழுதியதில் 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 58.82 சதவீதம். மாவட்டத்தில் இந்த பள்ளியில் தான் குறைவான தேர்ச்சி விகிதமாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளிகளில் அதன் தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் பாராட்டு
துறையூர் சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா, 1,189 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தையும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி ஷோபியா, 1,187 மதிப்பெண்கள் எடுத்து 3–வது இடத்தையும் பிடித்தனர். சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி மாணவி வித்யலட்சுமி, 1,188 மதிப்பெண்கள் எடுத்து 2–வது இடத்தை தட்டிச்சென்றார். பிற மொழி பாடத்தில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக தேர்வு செய்து படித்த திருச்சி சாவித்ரி வித்யாசாலா இந்து பெண்கள் பள்ளி மாணவி ஆனந்தி 1,193 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். அதே பள்ளியில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக தேர்ந்தெடுத்து படித்த மாணவி உண்ணாமலை 1,188 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2–வது இடத்தை பிடித்தார்.
மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளும், சமஸ்கிருத பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவியும் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment