Wednesday, 7 May 2014

25 சதவீத ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளுக்கு 3 மாதங்களில் கட்டணம் திருப்பி வழங்கப்படும்


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் மூன்று மாதங்களில் திருப்பி வழங்கப்படும் என தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.

இதையடுத்து, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க சம்மதம் தெரிவித்து தமிழக அரசுக்குக் கடிதம் அளித்ததாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறினார்.

தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 23 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு திருப்பி வழங்கவில்லை.

இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதற்காக ரூ.25 கோடி நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறி வந்தனர். இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் (2014-15) இந்த ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை மே 3-ஆம் தேதி முதல் தொடங்கியது.

மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்காததால், இந்த ஆண்டு 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சென்னையில் திங்கள்கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பையடுத்து, தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்தினார்.

பேச்சுவார்த்தையின்போது, தமிழக அரசின் சார்பில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் ரூ.25 கோடியை மூன்று மாதங்களில் திருப்பி வழங்குவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உறுதியளித்துள்ளார். இந்த தகவலை சங்க நிர்வாகிகளில் ஒருவரான கே.ராஜன் கூறினார்.

தமிழக அரசின் உறுதியைத் தொடர்ந்து இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க தனியார் பள்ளி நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்து கடிதம் வழங்கினர்.

இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியது:

தனியார் பள்ளிகளில் 2012-13, 2013-14 ஆகிய ஆண்டுகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை அரசிடம் கேட்டோம். ஆனால், இப்போது 2013-14- ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை மட்டும் 3 மாதங்களுக்குள் திருப்பி வழங்குவதாக தமிழக அரசு உறுதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு சம்மதம் தெரிவித்து அரசுக்குக் கடிதம் வழங்கியுள்ளோம்.

மேலும் 2012-13 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தையும் வழங்க வேண்டும் என கோரியுள்ளோம் என்றார் அவர்.

58 ஆயிரம் இடங்கள்:

தமிழகம் முழுவதும் 3,550 தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையின பள்ளிகள் தவிர்த்து) நுழைவு வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு) 25 சதவீத இடங்கள் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு வகுப்புகளில் 58,619 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இதில் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.

No comments:

Post a Comment