சத்துணவு மையங்களில், சுமார் 28 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், மாணவர்களுக்கு தரமான உணவினை, உரிய நேரத்திற்குள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சத்துணவு அமைப்பாளர்கள் அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் துவக்கப்பள்ளிகளில் 27,108 மையங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 15,043 மையங்கள், தேசிய குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளிகளில் 339 மையங்கள் உள்பட மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 220 நாள் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மையங்களிலும், ஒரு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 40 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சமையலுக்குத் தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவை, அந்தந்த மையங்களில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வாங்கப்படுகிறது. எனினும் சத்துணவு மையங்களை திறம்பட நடத்துவதில் சிக்கல் நீடிப்பதாகவும், இதனால் சில நேரங்களில் தரமான உணவை மாணவர்களுக்கு வழங்குவதில் பிரச்னை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சத்துணவு மையங்களில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஊழியர் பற்றாக்குறையே கார ணம். திமுக ஆட்சியில் 2010ல் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அதிமுக அரசு ஊழியர் பற்றாக்குறையை போக்குவதில் அக்கறை காட்டாமல் உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி கூறியதாவது: சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா, எங்களின் பிரச்னைகளை போக்குவதாக வும், காலிப் பணியிடங் களை உடனுக்குடன் பூர்த்தி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை எங்களின் கோரிக்கைகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும், சுமார் 15 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், 13 ஆயிரம் உதவியாளர்கள் என மொத்தம் 28 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சமைய லுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட, அதிகாரிகள் தாமதமாக தான் பணம் கொடுக்கின்றனர். உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment