தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 3,000 பேர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில், "கட்-ஆப்' மதிப்பெண், 185க்கும் அதிகமாக பெற்று, சாதனை படைத்து உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி வெளியானது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது.
இந்த தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், பொறியியல், மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்கள் பெற்ற, "கட்-ஆப்' மதிப்பெண் ஆகிய புள்ளி விவரங்களை சேகரிக்க, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார். மாவட்ட வாரியாக, புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டன. அதன்படி, மருத்துவம், பொறியியல், "கட்-ஆப்' மதிப்பெண் வரிசையில், 185 முதல் 200 வரை, 2,837 மாணவர்கள் இடம் பிடித்து, சாதனை படைத்தது தெரிய வந்துள்ளது. மாநிலம் முழுவதும், 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 113 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருப்பதாகவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், இந்த ஆண்டு, 84.1 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 5.1 சதவீதம், தேர்ச்சி
அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவம், பொறியியல் இரண்டிலும், அதிகபட்சமாக, நெல்லை மாவட்ட மாணவர்கள், 216 பேர், 185க்கும் அதிக மாக, "கட்-ஆப்' மதிப்பெண் பெற்று உள்ளனர்.
மிக குறைவாக, நீலகிரி மாவட்ட மாணவர்கள், 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி, நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, வேலூர், ஈரோடு, காஞ்சிபுரம், தருமபுரி, திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், மூன்று இலக்க எண்ணிக்கையில், "கட்-ஆப்' மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment