சிறப்பு வகுப்புகள், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பிரத்யேக கையேடுகள் என, பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, சென்னை மாநகராட்சி எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கு, இன்று வெளியாக உள்ள தேர்வு முடிவில், பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. கடந்த, மார்ச் மாதம் நடந்த, பிளஸ் 2 தேர்வில், 2,313 மாணவர்கள், 3,799 மாணவியர் உட்பட, 6,112 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி கல்வி துறை, இதுவரை, பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதம் என்ற தேர்ச்சி விகிதத்தை
எட்டவில்லை. அதற்காக, மொத்தம் உள்ள 32 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், நன்கு படிக்கும் மாணவர்கள் 150 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளி முடிந்த பின், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணிவரை மூன்று பயிற்சி மையங்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதேபோல தேர்ச்சி பெறுவதில், சிரமப்பட்ட மாணவர்கள், 350 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 35 மாணவர்கள், முழுநேரம் பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டு, சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் இந்த ஆண்டாவது, பிளஸ் 2 தேர்வு முடிவில் 90 சதவீதம் தேர்ச்சியை மாநகராட்சி கல்வி துறை எட்டுமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சி பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 2012ம் ஆண்டு 84.81 சதவீதமும், 2013ம் ஆண்டு 85.53 சதவீதமும் தேர்ச்சி பெற்றன. இந்த ஆண்டு 90 சதவீத தேர்ச்சியை எதிர்பார்க்கிறோம். மாநில அளவிலான தேர்ச்சியையும் எதிர்பார்த்திருக்கிறோம்' என்றார்.
உயர்கல்வி கையேடு இன்று வெளியீடு : சென்னை மாநகராட்சி உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு கையேடு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில், பிளஸ் 2 முடித்த பின், மாணவர்கள் தேர்வு செய்ய
வசதியாக, மொத்தம் 17 வகையான துறைகளின் உயர்கல்வி குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் இன்று இந்த சிறப்பு கையேடு வழங்கப்பட உள்ளது. இந்த கல்வியாண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த உயர்கல்வி குறித்த சிறப்பு கையேட்டினை வழங்க மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment