தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கும் விரைவில் பரிந்துரை தேவைப்படும் அளவில் உள்கட்டமைப்பு வசதி செய்து தரதப்பட்டுள்ளதுடன், தரமான கல்வி, கணினி வழிக் கல்வி என பல்வேறு பிற கலைகளும் கற்றுத் தரப்பட்டு வருகின்றது என்று விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மா.பிரபாகர் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச யோகா, கராத்தே மற்றும் ஆங்கில பேச்சுப் பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மா.பிரபாகர், விழாவிற்கு தலைமையேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறை அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது. கிராமப் புறத்தில் எத்தனையோ மாணவர்கள் வீணாக பொழுதைக் கழித்து வரும் நிலையில், ஒரு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவர்கள் விடுமுறை நாட்கள் முழுவதும் வந்து தங்களது உடலுக்கும், உள்ளத்திற்கும் பயனுள்ள பயிற்சிகளை எடுத்துள்ளனர். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தாழ்தப்பட்ட மக்கள் மட்டும் குடியிருக்கும் இக் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நலனில் அக்கறைகொண்டு ஆசிரியர்கள் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது.
இது ஒரு நல்ல முன் உதாராணம். தொடக்கக் கல்வித் துறைக்கு இப் பள்ளி பெருமை சேர்ப்பதாக உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அரசின் நோக்கம் நிறைவேற்றப்படும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பரிந்துரைகள் தேவைப்படும் அளவிற்கு பள்ளிக் கல்வித் துறை அபரிவித வளர்ச்சியை அடைந்து வருகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment