Thursday, 29 May 2014

மறையட்டும் பொறியியல் படிப்பு மாயை!

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 2.50 லட்சம் அச்சிடப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரை 2.20 லட்சம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன. பூர்த்தி செய்த 1.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்துசேர்ந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வுக்கானவை. இவை தவிர, நிர்வாக ஒதுக்கீட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் சேர்கிறார்கள்.
இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், மாணவர்களிடையே பொறியியல் படிப்புக்கான ஆர்வம் சற்று குறைந்திருப்பதுதான். கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர, கடந்த ஆண்டைவிட 15,000 பேர் குறைவாகவே விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதிலிருந்து பி.இ. படிப்பின் மீதான மோகம் குறைந்து வருவது தெரிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு, இளங்கலை வரலாறு, தமிழ், கணிதம், வேதியியல், இயற்பியல் என பல்வேறு பிரிவுகளில் பட்டம்பெற்ற இளைஞர்கள் எவ்வாறு அவர்கள் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத துறைகளில் வேலைக்கு சேர்ந்தார்களோ அதே போன்ற சூழல் தற்போது பொறியியல் கல்வி படித்து வெளிவரும் மாணவர்களுக்கும் நேர்ந்து வருகிறது. அவர்கள் படித்த படிப்புக்கும் பார்க்கும் தொழிலுக்கும் தொடர்பில்லாமல் இருக்கும் நிலைமை பரவலாகி வருகிறது.
கணினி பாடத்தில் பொறியியல் படித்து முடித்த மாணவர் பி.பி.ஓ. நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார். இந்த வேலையைச் செய்ய அவருக்கு நான்கு ஆண்டு பொறியியல் படிப்பு அவசியமே இல்லை. யார் வேண்டுமானாலும், எந்தத் துறையில் பட்டம் பெற்றவரும் சில நாள்களில் கணினி நிறுவனங்களின் பி.பி.ஓ. வேலைகளைப் பழகிக்கொள்ள முடியும். அப்படியிருக்க எதற்காகப் பொறியியல் பட்டம்?
மேலும், இயந்திரத் தொழில் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களைக் காட்டிலும், பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவர்களைப் பணியமர்த்துவற்கே முன்னுரிமை தருகின்றன. உதாரணமாக, ஒரு கட்டுமான நிறுவனத்தின் வேலைக்காக, பாலிடெக்னிக்கில் சிவில் பிரிவில் பட்டயம் பெற்ற மாணவரும் பொறியியல் (சிவில்) மாணவரும் விண்ணப்பித்தால், பட்டயப் படிப்பில் வந்த மாணவருக்கே முன்னுரிமை தருகின்றனர். பட்டயப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்குக் களப்பணி அனுபவம் இருப்பதுதான் அதற்குக் காரணம். அவர்கள் இறங்கி வேலை செய்வார்கள், பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் சட்டை அழுக்காவதை விரும்ப மாட்டார்கள் என்பது ஒரு காரணமென்றால், பட்டயம் பெற்ற மாணவருக்கு சம்பளத்தை குறைத்துக் கொடுக்க முடியும் என்பதும் மற்றொரு காரணம்.
இதனால் மூன்று விதமான இழப்புகள்: முதலாவது, ஒரு குறிப்பிட்டத் துறையில் திறனுறு ஊழியர்களை உருவாக்கும் நோக்கத்துடன் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய மாநில அரசுகள் செலவிடும் மக்கள் பணம் வீணாகிறது. இரண்டாவது, மாணவர்கள் சுமார் நான்கு ஆண்டுகளை வீணாக்குகிறார்கள். மூன்றாவது, அந்த மாணவரின் குடும்பம் செலவழிக்கும் பெருந்தொகை பயனற்றுப் போவதால், பல குடும்பங்கள் மனமுடைந்து வேதனைப்படுகின்றன.
ஆகவே இன்றைய சூழ்நிலையில், தொழில்துறைக்கு தேவையான ஊழியர்களை உருவாக்க வேண்டும் என்றால், நாட்டுக்கோ குடும்பத்துக்கோ நட்டம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்களை தமிழக அரசும் இந்திய அரசும் செய்தாக வேண்டும்.
முதலில், தனியார் பொறியியல் கல்லூரிகளை ஊக்குவிப்பதைவிட, அதிக அளவில் பாலிடெக்னிக்குகளை ஊக்குவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே மாணவர்கள் பாலிடெக்னிக்கில் சேர்ந்து, பட்டயப் படிப்பை படிக்கவும் அதற்கு மேலாக அவர்கள் பொறியியல் பட்டம் பெற விரும்பினால், தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் பொறியியல் பட்டம் பெறவும் வழிகோல வேண்டும்.
இரண்டாவதாக, கலைக்கல்லூரிகளில் பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயன்ஸ் இருப்பதைப் போல, இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் கூடுதல் படிப்புகளாக பல பாடத் திட்டங்களைப் புகுத்தி நான்கு ஆண்டு பொறியியல் படிப்புக்கு இணையான இளங்கலை படிப்புகளை உருவாக்கினால் செலவு பாதியாகக் குறையும்; வேலைவாய்ப்பும் சுலபமாகக் கிடைக்கும்.
தகுதியும் திறமையும் இல்லாவிட்டாலும், பொறியியல் படித்தால் மட்டுமே வருங்காலம் என்கிற எண்ணம் புரையோடிக் கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் படித்து வெளியே சென்ற மாணவர்களின் தகவல்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது. அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் மட்டுமே பொறியியல் மாயை மறையும்!

No comments:

Post a Comment