Wednesday, 21 May 2014

குமரியில் தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்

குமரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக இரணியல், படந்தாலுமூடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பளுகல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுதவிர, பாட வாரியாக குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்று கொடுத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் 12 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நேற்று காலை போராட்டக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகளுடன் முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளிப்பதற்காக நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் இல்லாததால், அலுவலக வளாகத்தில் கோரிக்கை விளக்க கூட்டத்தை ஆசிரியர்கள் நடத்தினர். ‘முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து பேசும் வரை நாங்கள் செல்ல மாட்டோம்‘ என்று அவர்கள் கூறியதால் பரபரப்பு நீடித்தது. பின்னர் போராட்ட குழுவினருடன் கல்வி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சஸ்பெண்ட் நடவடிக்கைகளை ரத்து செய்வதாக மாவட்ட கலெக்டர் வாய்மொழியாக உத்தரவிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விளக்கம் கோரப்பட்ட 12 ஆசிரியர்களும் முறைப்படி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 12 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment