Sunday, 25 May 2014

கடும் வெயில் எதிரொலி: பள்ளி திறப்பு தேதி மாறுமா?


அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் தருவாயிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலை, மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்பதால், தமிழகத்தில், பள்ளி திறப்பு தேதியை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில், தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், தலைநகர் சென்னை உட்பட, வட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில், வெளியே செல்ல முடியாத அளவிற்கு, வெப்பம் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம், வரும், 28ம் தேதியுடன் முடிவுக்கு வந்தாலும், தற்போதுள்ள வெயிலின் கொடுமை, மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தமிழகம் முழுவதும், ஜூன், 2ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு, இன்னும், எட்டு நாட்களே உள்ளன. கடந்த ஆண்டு, கடும் வெயில் காரணமாக, பள்ளி திறப்பு தேதி, ஜூன், 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும், இரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, ஆரம்ப பள்ளி மாணவர்கள் முதல், நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வரை, வெயில் பாதிப்பிற்கு ஆளாவர் என்பதால், இந்த பள்ளிகளின் திறப்பு தேதியை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'தற்போது வரை, பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இல்லை. எனினும், வெயில் அதிகமாக இருந்தால், அதற்கேற்றார்போல், தமிழக அரசு, உரிய முடிவை எடுத்து அறிவிக்கும்' என, தெரிவித்தது.

No comments:

Post a Comment