Sunday, 4 May 2014

ஆங்கில மோகத்துக்கு அடிபணிகிறதா தஞ்சை தமிழ் பல்கலை?

தஞ்சை தமிழ் பல்கலையின் இணைய தளத்தில், பல்கலையின் திட்டங்கள் குறித்த எந்த தகவலும், தமிழ் மொழியில் இல்லை. இது தமிழ் ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.
மதுரையில், 1981ல், உலகத் தமிழ் மாநாடு நடந்த போது, 'தமிழ் மொழிக்காக, ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்' என, அப்போதைய முதல்வர், எம்.ஜி.ஆர்., அறிவித்தார். உடனே, அதற்கான குழுவையும் அமைத்தார்.
இணையதளம்:
அதில், தமிழறிஞர்கள், ம.பொ.சிவஞானம் வ.சு.ப.மாணிக்கம், சாலை இளந்திரையன், கி.ஆ.பெ.விஸ்வநாதம் ஆகியோர் இடம் பெற்றனர். அதே ஆண்டு, செப்டர்பர் மாதம், தஞ்சாவூரில், 1,000 ஏக்கரில், தமிழ் பல்கலை உருவாக்கப்பட்டது. பல்கலையின் நேரடி மற்றும் தொலை நிலை கல்வி மாணவர்கள், பல்கலையின் செயல்பாடுகளை அறிய, இணையதளம் துவக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் என, இரண்டு மொழிகளில், தகவல் அறியும் வகையில், வடிவமைக்கப்பட்டது. இதில், பல்வேறு தலைப்புகளின் கீழ், பல்கலையின் செயல்பாடுகள், வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில், ஒரு பிரிவில் கூட, தகவல் பதிவு செய்யவில்லை. ஆங்கிலத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இதில், ஒவ்வொரு பிரிவிலும், அனைத்து தகவல்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. பல்கலை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும், செய்தி மற்றும் உத்தரவுகள் கூட, ஆங்கிலத்தில் மட்டுமே பதிவேற்றப்படுகின்றன. தஞ்சை தமிழ் பல்கலை, தொலைநிலை கல்வியில், பல்லாயிரம் பேர், இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், படித்து வருகின்றனர்.
கோரிக்கை:
இந்த மாணவர்கள், தேர்வு குறித்த தகவல் அறிய, விண்ணப்ப படிவம் பெற வேண்டுமெனில், பல்கலையின் இணைய தளத்துக்கு செல்ல வேண்டும். ஆனால், இணையதளத்தில், தேர்வு குறித்த, அனைத்து தகவல்களும், ஆங்கிலத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே, இனிமேலாவது, பல்கலை நிர்வாகம் இணைய தள செயல்பாடுகளில், அக்கறை காட்ட வேண்டும் என்பது, தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை.

No comments:

Post a Comment