Saturday, 3 May 2014

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கோர்ட்களில் அரசு வக்கீல்கள் அவசியம் : ஐகோர்ட் அறிவுரை

பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ், பதிவான வழக்குகளை விசாரிக்கும் கீழ் கோர்ட்களில் ஆஜராக, மாநில அரசு சிறப்பு வக்கீல்களை நியமிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்தவர் சண்முகவேல்ராஜ். இவர், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருநெல்வேலி மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருநெல்வேலி செஷன்ஸ் (மகிளா) கோர்ட்டில், போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். சண்முகவேல்ராஜ், "இவ்வழக்கில், அரசு சிறப்பு வக்கீலாக (பொறுப்பு) மேகலா செயல்படுகிறார். "பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ)-2012'ன்படி நியமிக்கப்படும் அரசு சிறப்பு வக்கீல்தான் ஆஜராக வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நியமிக்கப்பட்ட வக்கீல் ஆஜராக முடியாது. மேகலா ஆஜராக தடை விதிக்க வேண்டும்,' என மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவு: செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜராகும் எந்த ஒரு அரசு சிறப்பு வக்கீலும், இவ்வழக்கில் ஆஜராவதில் தவறில்லை. குறிப்பிட்ட அரசு வக்கீல்தான் வாதாட வேண்டும்; மற்ற அரசு வக்கீல்கள் வாதாடக்கூடாது என "போக்ஸோ' சட்டத்தில் வரையறை செய்யவில்லை.
மேகலாவின் நியமன உத்தரவை ஆய்வு செய்ததில், அவர்,"சிறப்பு அரசு வக்கீல் (மகிளா கோர்ட்),' என உள்ளது. அவருக்கு, 23 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளது. "போக்ஸோ' சட்டப்படி, 7 ஆண்டுகள் முன் அனுபவம் போதுமானது. இந்நிலையில், மேகலா இவ்வழக்கை நடத்துவதில் தவறில்லை.
"போக்ஸோ'சட்டத்தின் முக்கிய நோக்கமே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை, விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதே. குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நியமிக்கப்பட்ட அரசு சிறப்பு வக்கீல் வேறு; "போக்ஸோ' சட்டத்தில் வழக்காடுவதற்கு சிறப்பு வக்கீல் வேறு. "போக்ஸோ' சட்டப்படி பதிவான வழக்குகளை விசாரிக்கும் கீழ் கோர்ட்களில், அரசுத் தரப்பில் ஆஜராகி வாதாட சிறப்பு வக்கீல்களை, தமிழக அரசு நியமிக்க வேண்டும். இக்கடமையை, மாநில அரசு நிறைவேற்றாமல் இருக்க முடியாது. இதில், தாமதம் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment