Thursday, 1 May 2014

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வற்புறுத்தல்


தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜோதிபாசு, மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் எந்தவித வரைமுறையின்றி கூடுதலாக கல்வி கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கல்விக் கட்டணங்கள் குறித்து தமிழக அரசு நியமித்த நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான கமிட்டி ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது. இந்த சிபாரிசுகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது அநீதியானது.

எனவே தனியார் பள்ளிகள் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், மாவட்ட கலெக்டர் தலைமையில் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.

நீதிபதி சிங்காரவேலு கமிட்டி நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை அந்தந்த பள்ளிகள் முன்பு அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். பள்ளியில் தான் சீருடைகள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. தமிழக அரசு அறிவித்துள்ளபடி 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்தாத பள்ளிகளின் அனுமதியை ரத்து செய்து அப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment