Sunday, 4 May 2014

ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: புதிய அட்டவணை வெளியிடாததால் குழப்பம்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், புதிய அட்டவணையை வெளியிடவில்லை. இது, தனியார் பள்ளிகளுக்கு, சாதகமாக அமைந்துள்ளது.
25 சதவீதம்:
ஆர்.டி.இ., சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், ஆரம்பநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு), உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, சமுதாயத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, ஒதுக்க வேண்டும். இந்த பிரிவில் சேரும் குழந்தைகளுக்கான கல்விச் செலவை, மத்திய அரசு ஏற்கிறது. இந்த பிரிவின் கீழ், மாணவர்களை சேர்க்க, தனியார் பள்ளிகள், ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த ஆண்டு, 20 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த போதும், அவர்களுக்கான கல்வி கட்டணம், இதுவரை, பள்ளிகளுக்கு வழங்கவில்லை. இதனால், இந்த ஆண்டு, ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கை, பெரிய அளவில் நடக்காது என, தெரிகிறது. ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கை நடத்த, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், ஏற்கனவே அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 25 சதவீத இடங்கள் விவரத்தை, நேற்று முன்தினமே, அறிவிப்பு பலகையில், பள்ளிகள் வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு பள்ளியும், அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட வில்லை. இரண்டு தினங்களுக்கு முன்பிருந்தே, விண்ணப்பம் வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்களுக்கு முன்பே, மொத்த இடங்களையும், பள்ளிகள் நிரப்பிவிட்டன.
அட்டவணையை காணோம்:
ஒருசில பள்ளிகள், ஆர்.டி.இ., கீழ், மாணவர் சேர்கை நடத்த ஆர்வம் காட்டினாலும், அதற்குரிய வழிகாட்டுதலை, இயக்குனரகம் வெளியிடவில்லை. ஆர்.டி.இ., ஒதுக்கீட்டின் கீழ், விண்ணப்பம் வழங்குவதற்கான காலக்கெடு, நேற்று முதல், 9ம் தேதி வரை உள்ளது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில், பொதுநல வழக்கு ஒன்று தாக்கலானது. அதில், நேற்று முதல், 18ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஏற்ப, பழைய அட்டவணையில் மாற்றம் செய்து, புதிய அட்ட வணையை, இயக்குனரகம் வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், நேற்று மாலை வரை, புதிய அட்டவணை வெளியிடவில்லை. இயக்குனரகத்தின், இந்த அமைதி, 25 சதவீத இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும், பெரிய தனியார் பள்ளிகளுக்கு, சாதகமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment