புகை பிடிக்கும் பழக்கம் பள்ளி பருவத்திலேயே துவங்கி விடுகிறது என 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர், '' என மாநில புகையிலை தடுப்பு இணை இயக்குநர் டாக்டர் வடிவேல் ஈரோட்டில் நடந்த ஆய்வு கருத்தரங்கில் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று மாவட்ட சுகாதார துறை சார்பில், புகையிலை தடுப்பு ஆய்வு கருத்தரங்கம் நடந்தது. மாநில புகையிலை தடுப்பு அமைப்பின் இணை இயக்குநர் வடிவேல் பேசியதாவது: அகில இந்திய அளவில் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், புகை பிடிக்கும் பழக்கம் எந்த வயதில் இருந்து மேற்கொள்கிறீர்கள் என புகைபிடிப்பவர்களிடம் கேட்கப்பட்டது. 40 சதவீதம் பேர், "பள்ளி படிப்பின் போதே புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர்'
ஆகவே, புகையிலை தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு பிரச்சாரத்தை பள்ளிகளில் இருந்தே துவங்க வேண்டும். அப்போது தான் இதை தடுக்க முடியும். புகை பிடிக்கும் பழக்கத்தில் உள்ளவர்களை மீட்க கவுன்சிலிங் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற இரண்டு வழிகளில் தான் இதைதடுக்க முடியும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள், மாவட்ட சுகாதார துறையில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள் ஆகியோர் ஆய்வில் ஈடுபடலாம். வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை சம்பந்தமான பொருள்கள் மற்றும் சிகரெட் விற்பனை செய்வதை தடுக்க ரெய்டு நடத்த வேண்டும். பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். பொது இடத்தில் புகை பிடித்தால் 100 ரூபாயிலிருந்து 200 வரை அபராதம் விதிக்கலாம். பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கலாம். மருத்துவமனை, பள்ளிகள், கோர்ட், அரசு அலுவலகங்கள் உட்பட பொது மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் புகைப்பிடிப்பவர்கள் மீது ரெய்டு நடத்தி அபராதம் விதிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள், தடை செய்யப்பட்ட பகுதி என போர்டு வைக்க வேண்டும். பள்ளியோ அல்லது கல்லூரியோ சுகாதார சான்று பெற வரும் போது, இதுபற்றி அறிவுறுத்த வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும், புகையிலை தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட அபராத தொகை பற்றிய விபரம், அதற்காக ரெய்டு விபரம் போன்றவற்றை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பாலுசாமி, ஈரோடு மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சுமதி, மாவட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment