Wednesday, 7 May 2014

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; செயல்படுத்த தீவிர ஏற்பாடு


அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித் துறை உத்தரவை செயல்படுத்த உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது. 
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திட்டத்தின் முன்னோடியாக கடந்த கல்வியாண்டில், துவக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும், நடுநிலைப்பள்ளிகளில் ஆறாம் வகுப்புகளுக்கும் ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆங்கில வகுப்புகள் நடத்த விரும்பும் அரசு உயர்நிலைப்பள்ளிகள் ஆறாம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கவும், ஆங்கில வகுப்புகளில் நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை இருக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே ஆங்கில வழிக் கல்வி முறை செயல்படுத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது. இதன்படி, மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள சில உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில கல்வி முறை கடந்த கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக ஆங்கில வகுப்புகள் துவக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட பத்திற்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 
ஆங்கில வழிக் கல்வி முறை கட்டாயம் என்ற கல்வித்துறை உத்தரவு காரணமாக ஆங்கில வழி முறை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையினை பள்ளிகள் துவங்கியுள்ளன. உடுமலை, குடிமங்கலம் பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களே அதிகமாக உள்ளனர். அவர்களுள் பலருடைய பெற்றோருக்கும் ஆங்கில வழி கல்வியில் தங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இருப்பினும், வசதி குறைவால் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்க வைக்கின்றனர். அரசின் இந்த உத்தரவு கிராமப்புற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரிதும் மகிழ்ச்சி அளித்துள்ளது.ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கும் சலுகைகள் அளிக்கப்படுவதால் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலையில் இரண்டிற்கும் மேற்பட்ட பள்ளிகள், குடிமங்கலம் பகுதியில் இரண்டு பள்ளிகளிலும் கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் ஆங்கில கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. இதனால் பள்ளிகளிலும் தரம் உயரும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என உடுமலை கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தமிழக அரசின் சலுகைகள் ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளில் சேரும் பெண் குழந்தைகளுக்கு உதவி தொகை இந்த கல்வியாண்டு முதல் வழங்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர் எண்ணிக்கை நாற்பதிற்கும் மேல் இருக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடுகளும் இம்முறை தளர்த்தப்பட்டுள்ளது, பள்ளிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதனால், அரசு உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் மாணவர் சேர்க்கையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களும் அரசு பள்ளிகளில் ஆர்வமுடன் சேருகின்றனர்.இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment