Thursday, 22 May 2014

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம் விரைவில் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான, இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம், மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளது. இதற்கிடையே, பள்ளிகளின் நிர்வாகத்தினர், பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பங்களை, போக்குவரத்துக் கழகங்களில் இருந்து பெற்று செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, "ஸ்மார்ட் கார்டு' ஆக, வழங்கப்படும் பஸ் பாசை, இந்தாண்டு, 30 லட்சம் மாணவர்கள் பெறுகின்றனர்.
பஸ் பாஸ் தயாரிக்கும் பணிக்காக, சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.,) சார்பில், கடந்த மாதம் டெண்டர், கோரப்பட்டது.

இதுகுறித்து, ஐ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறுகையில், "டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில் இருந்து, தகுதியான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. மூன்று நாட்களுக்குள், பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து விடுவோம்' என்றார். இதற்கிடையே, மாணவர்களுக்கான பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பங்களை, போக்குவரத்துக் கழகங்களுக்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளவும், இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகர் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 60 ஆயிரம் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று சென்றுள்ளனர். பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினர், இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவர்களிடம் வழங்கப்படும். பின், பஸ் பாஸ் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கும் பணியை துரிதப்படுத்துவோம். மற்ற கழகங்களிலும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment