கிராமங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஒன்றிய கல்விக்குழு கூட்டம், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் முறையாக நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வித்தரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஒன்றிய கல்விக்குழு செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒன்றிய கல்விக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவர், உதவி தொடக்க கல்வி அலுவலர், வார்டு கவுன்சிலர்கள், கல்வியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் பங்குபெற வேண்டும். ஒன்றியத்திலுள்ள பள்ளிகளின் மேம்பாடு குறித்த நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிைறவேற்றப்படும். ஆனால், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய குழு கூட்டம் நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
உடுமலை ஒன்றியத்தில் 98 துவக்கப்பள்ளிகள், 22 நடுநிலைப்பள்ளிகள் 16 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளின் வளர்ச்சி, தேவையான வகுப்பறை, மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், சத்துணவு மையங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த அனைத்து விவரங்களும் அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளை அறிவதற்கே ஒன்றிய கல்விக்குழுக்கள் செயல்படுகிறது. கல்விக்குழுக்களின் கூட்டத்தில் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் பற்றி குழு உறுப்பினர்களின் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்கள் தெரிந்துகொண்டு, மாவட்ட கல்வித்துறைக்கு பள்ளி மேம்பாடுகளுக்கான விவரங்களை அனுப்ப வேண்டும். இதன் மூலமே பள்ளி மற்றும் மாணவர்களின் தேவைக்கு மாநில, மத்திய அரசின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒன்றிய கல்விக் குழுக் கூட்டம் உடுமலை ஒன்றியத்தில் முறையாக நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தேவையான வசதிகள் கேள்விக்குறியாகிறது என உடுமலை கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கல்வி தரம் உயரவும் இக்குழு எந்தவித செயல்பாடுகளும் நடத்தவில்லை என புகார் எழுப்புகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்கள் மட்டுமின்றி அக்குழுவில் உறுப்பினர்களாக பங்கேற்க வேண்டிய ஒன்றியத் குழு தலைவர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் குழு செயல்படுவது குறித்து ஆர்வம் இல்லாமல் உள்ளனர். ஏராளமான ஒன்றியப் பள்ளிகள் மேம்பாட்டு வசதிகள் எதுவுமின்றி மாணவர் எண்ணிக்கையை இழந்துள்ளது. மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது. ஒன்றியப் பள்ளிகளின் நிலையை மாற்ற இக்குழு விரைவில் செயல்பட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த புகார் மனுவும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment