திருச்சி மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட தனி மாவட்ட அறிவிப்பை 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை பகுதி கடந்த 1974ம் ஆண்டு திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகள் மட்டும் திருச்சி மாவட்டமாக இருந்து வந்தது. அத்தகைய சூழ்நிலையில் தான் திருச்சி மாவட்டத்தை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திருச்சி மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் உருவானது.
இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா தனது தொகுதிக்கு தேசிய சட்டபள்ளி, மகளிர் தோட்டக்கலை கல்லூரி, காகித ஆலை உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து வருகிறார். தற்போது 30ம் தேதி திருச்சி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் திருச்சிக்கான ஒருங்கிணைந்த பஸ்நிலையம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் யாத்திரிகர்கள் தங்குவதற்கான யாத்திரிக நிவாஸ் உள்ளிட்டவைகளை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் பகுதிகளை உள்ளிட்டக்கிய வகையில் இந்த மாவட்டம் இருக்கும் என்றும், திருச்சி மாவட்டம் திருச்சி, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் இதற்கான பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மாவட்டங்கள் எண்ணிக்கை 33 ஆக உயரும்
தற்போது திருச்சி மாவட்டம் 4403.83 சதுர கிமீ பரப்பளவு கொண்டதாகவும் மக்கள் தொகை சுமார் 27,13,858 ஆகவும் உள்ளது. இதில் ஆண்கள் 13,47,863, பெண்கள் 13,65,995 ஆகும். ஸ்ரீரங்கம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணி க்கை 33 ஆக உயரும்.
No comments:
Post a Comment