Sunday, 1 June 2014

பி.எட், எம்.எட் படிப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை


தனியார் கல்வியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் கூறியுள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட், எம்.எட் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி என 102 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. இதில் 15 மையங்களாக பிரிக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வித்தாளில் எந்தவித குழப்பமும் இல்லை.

கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக ரெப்ரசண்டேடிவ், பறக்கும்படை என மூன்றடுக்கு கண்காணிப்பு உள்ளது. சுமார் 75 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்ற ஆண்டு தேர்வு எழுதி அரியர் உள்ள மாணவர்கள் 5 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கல்வியியல் கல்வியின் தரத்தை உயர்த்த பிஎட் கல்வியை இரண்டு ஆண்டுகளாக மாற்ற தேசிய ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (என்சிடிஇ) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து வெப்சைட்டில் மாணவர்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கல்வியியல் கல்வி இரண்டாண்டுகளாக மாற்றப்படுமா என்பது தெரியவரும். தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பணம் வாங்க கூடாது என அரசு ஆணையை தமிழக முதல்வர் பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் முழுவதும் வழங்கப்படும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பணத்தை கல்லூரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment