Friday, 20 June 2014

பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!


தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத், சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கொண்டை கடலை புலாவ், கறிவேப்பிலை சாதம், மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறி சாதம், தக்காளி சாதம் என வழங்கப்படுகிறது. இதுதவிர ஆம்லேட், முட்டை பொடிமாஸ், முட்டை வறுவல், அவித்த முட்டை என 4 வகையாக முட்டை 5 நாட்கள் வழங்கப்படுகிறது. சென்னையிலிருந்து 20 சிறந்த சமையல் கலை வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டு 32 மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள சத்துணவு பணியாளர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 2013-2014ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.1588,65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலவை சாதம் திட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment