Monday, 9 June 2014

தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை


குமரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த 3 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் 12 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

மேலும், தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை திரும்ப பெறப்படும் என்று கல்வி அதிகாரிகள் கூறினர். அதையேற்று ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். எனினும், இதுவரை தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை முறைப்படி திரும்ப பெறப்படவில்லை.

இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி இன்று ஆசிரியர்கள் கோரிக்கை தினமாக கடைபிடிக்குமாறு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி இன்று குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிக்கு வந்த ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.

குறிப்பாக அரசு பள்ளிகளில் 1 முதல் 12–ம் வகுப்பு வரை பணிபுரியும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், இடை நிலைக்கல்வி ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.

No comments:

Post a Comment