Saturday, 21 June 2014

கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக பள்ளிக் கல்வித் துறைக்கு சொந்தமாக உயர்தர சர்வர்


மூன்று மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

தமிழகம் முழுவதும் உள்ள 57 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவர்கள், 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்கான www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இந்த மையத்தையும், இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சியையும் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு நிருபர்களிடம் கே.சி. வீரமணி, சபிதா ஆகியோர் கூறியது:

சர்வர் பராமரிப்பு, தகவல் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை புதிய மாற்றங்களுடன் நிரந்தரமாக பராமரிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கு சொந்தமாக உயர்தர சர்வர் வாங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் விதமாக மாணவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் தொகுக்கப்பட உள்ளது.

ஏற்கெனவே 2012-13 ஆம் கல்வியாண்டில் இருந்து பராமரிக்கப்படும் புள்ளி விவரங்கள் நடப்பு கல்வியாண்டுக்கு மாற்றம் செய்யும் விதமாக முதல், இரண்டாம் வகுப்பு நீங்கலாக பிற மாணவர்களின் புள்ளி விவரங்கள் தானாக "அப்டேட்' செய்யப்பட்டுவிடும் என்றார் அவர். அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment