Thursday, 19 June 2014

விழி பிதுங்கும் மாணவர்கள்; பாஸ் இல்லை என்றால் பேருந்துகளில் கட்டணம்


விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பள்ளி சீருடை அணிந்திருந்தும், பழைய பாஸ் இல்லாவிட்டால் மாணவர்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகளின் உத்தரவை மீறி செயல்படும் கண்டக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்க ஆகஸ்ட் வரை ஆகும். இதனால் ஜூன் முதல் மூன்று மாதங்களுக்கு தங்களின் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி அரசு பஸ்களில் பயணிக்கலாம். பாஸ் இல்லாவிட்டாலும் சீருடை அணிந்திருந்தாலே இலவச பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சீருடை அணிந்திருந்தாலும், பயணத்தின்போது கண்டிப்பாக பழைய பாஸ் வைத்திருக்க வேண்டும் என, ஒரு சில கண்டக்டர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது. பழைய பாஸ் இல்லாவிட்டால் மாணவர்களிடம் டிக்கெட் கொடுத்து கட்டணத்தை வசூலிக்கின்றனர்.

திருச்சுழியில் இருந்து அருப்புக்கோட்டை சென்ற ஒரு அரசு பஸ்சில்தான் இந்த சம்பவம் நடந்தது. ஒருவேளை பணம் இல்லையெனில், மாணவர்களை இறக்கிவிடும் சூழ்நிலையும் உள்ளது. காலையில் பள்ளி செல்லும்போதும், பின்னர் வீடு திரும்பும்போதும் அவதிப்படுகின்றனர்.

எதிர்பாராதவிதமாக பஸ் பாஸை மாணவர்கள் தொலைத்திருந்தால், அவர்கள் புது பாஸ் வரும் வரை, பஸ்சில் பயணம் செய்வது குறித்து அதிகாரிகள் தெளிவாக விளக்க வேண்டும். அதை கண்டக்டர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கண்டக்டர்களிடம் கேட்டபோது, "பழைய பஸ் பாஸ் இல்லாமல் மாணவர்களை பயணம் செய்ய அனுமதிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்பேசனையும் இல்லை. ஆனால், நடுவில் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஏறி சோதனை செய்தால், மாட்டிக் கொள்வது நாங்கள்தான். அதன்பின் எங்களுக்கு விளக்கம்கேட்டு மெமோ வரும். அதன்தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகளை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்" என்றனர்.

விருதுநகர் காளிதாஸ், "பாஸ் இல்லாவிட்டாலும், பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்யலாம் என்ற உத்தரவை, அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். இதற்காக, அரசு போக்குவரத்துக்கழகம், கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க வேண்டும். அந்த நடைமுறை குறித்து கண்டர்களிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் பாதிக்கப்படுவர். புது பாஸ் வரும் வரை அவர்களுக்கு பிரச்னை தொடரும்" என்றார்.

விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறும்போது, "புது பஸ் பாஸ் வரும் வரை, பழைய பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் பள்ளி சீருடை அணிந்திருந்தாலே மாணவர்கள் அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் என கல்வித்துறை தெரிவித்தது. அதுகுறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஏதேனும் புகார் இருப்பின் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment