Monday, 23 June 2014

மழலைகளாகிலும் தமிழ் படிக்கட்டும்!


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான். அவர்கள் இந்த முடிவை ஏற்க மறுத்து தொடர்ந்து நீதிமன்ற வாசலைத் தேடிப்போகிறார்கள்.

மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர் என்ற போர்வையில் தமிழை ஒரு கட்டாயப்பாடமாக்குவது கூடாது என்று வாதிடுகின்றனர். அவர்கள் வாதம் இதுதான்: கேரள மாநிலத்தை அடுத்துள்ள கோவை நகரில் மலையாளிகள் நிறையபேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மலையாளம் படிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஓசூர் பகுதியில் உள்ள பள்ளிகள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளை காட்டுகின்றனர். திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர்களின் பலரது குழந்தைகளுக்கு தெலுங்கு தாய்மொழி என்கின்றனர். இதேபோன்று மதச் சிறுபான்மையினர் உருது, சம்ஸ்கிருதம் ஆகிய பாடங்களை தமிழுக்கு மாற்றாக வைக்கின்றனர்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை குழந்தைகளின் தாய்மொழியாக இருக்கும்பட்சத்தில், இந்தப் பள்ளிகள் ஏன் தமிழ்நாடு கல்வி வாரியத்துடன் இணைந்திருக்க வேண்டும்? மலையாள பள்ளிகள் கேரள கல்வித்துறையுடனும், கன்னடப்பள்ளிகள் கர்நாடக மாநில கல்வித் துறையுடனும், தெலுங்கு மொழிப் பள்ளிகள் ஆந்திர கல்வித் துறையுடனும் இணைவு பெற்று, அவர்களது பாடத்திட்டத்தின்படி பயிற்றுவிக்கலாமே, அதில் என்ன தடை?

இதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள மதச் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் கூடாது என்ற நிலைப்பாடு சரி என்றால், அவர்கள் மதரஸாக்களில் சேர்ந்து ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களையும் உருது மொழியில் படிப்பதில் என்ன தடை? ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களை சம்ஸ்கிருதத்தில் படிப்பதில் என்ன தடை?

இந்தி மொழி தேவை என்று விரும்புவோர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தேர்வு செய்வதில்லையா? அதுபோல், அவரவருக்கு விருப்பமான மொழிக்கான பள்ளிகளைத் தேர்வு செய்துகொள்ளட்டுமே!

இவ்வாறாக பள்ளிகளை மொழிவாரியாக, மதவாரியாக பிரிக்கவும் செய்யாமல், தமிழ்நாடு முழுமைக்கும் ஒரு சட்ட விதிவிலக்கைப் பயன்படுத்தி, அனைத்து முன்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிப் பாடநூல்களை ஆங்கில வழியில் சொல்லித் தர வேண்டிய அவசியம் என்ன? முன்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்பதோடு, கணிதம், சமூகவியல், அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு பாடங்களைத் தாய்மொழியில்தான் கற்பிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை இதுவரை யாருமே கண்டுகொள்ளவில்லையே, எதனால்?

ஆங்கிலவழிக் கல்விதான் உயர்கல்விக்கு உதவும் என்ற விஷவிதை முதலில் தூவப்பட்டது. ஆனால் இவர்கள் ஆங்கிலத்தையும் முறைப்படி கற்றுத்தரவில்லை. தமிழ்மொழி கட்டாயம் என்பதையும் ஏற்க மறுத்து, மதிப்பெண் அதிகம் பெறும் வழிகளில் ஒன்றாக சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன் (எந்த வகையில் தாய்மொழியோ?) சொல்லித் தரவும் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வசிக்கும் கேரளத்தவர், கன்னடியர், தெலுங்கர்களும், தங்கள் குழந்தைகள் உருது பயில வேண்டும் என விரும்பும் இஸ்லாமியர்களும், சம்ஸ்கிருதம் பயில வேண்டும் எனக் கருதும் இந்துக்களும் தங்கள் வீட்டில் அல்லது அவர்கள் சார்ந்த சமூக அமைப்புகளில் வைத்து அந்தந்த மொழியைக் கற்றுத் தருவது எளிது. இதைத்தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வாழும் தமிழர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் செய்கிறார்கள்.

அரை நூற்றாண்டுக்கு முன்னால்வரை உயர்நிலைப்பள்ளி வரை மாணவர்களுக்கு தமிழ்தான் பாடமொழியாக இருந்து வந்தது. விஞ்ஞானிகளும், அறிஞர்களும் கல்லுரியில்தான் ஆங்கிலப் பாடமொழியில் படித்தனர். அவர்களது தமிழும் நன்றாக இருந்தது. ஆங்கிலமும் நன்றாகவே இருந்தது. இப்போது ஏன் தாய்மொழியைப் பயிற்றுவிக்கத் தயங்க வேண்டும் என்பது புரியவில்லை.

ஏற்கனவே ஆங்கிலக் கலப்பால் மொழிச் சிதைவு ஏற்பட்டிருக்கிறது. பள்ளியிலும் பயிற்றுவிக்காமல் போனால், தமிழ் வழக்கொழிந்துவிடும். அப்படியொரு நிலைமைக்கு நமது தலைமுறை காரணமாக இருந்துவிடலாகாது.

முதல்வர் இதில் தலையிட்டு, தமிழ்நாட்டில் அனைத்து முன்பள்ளி, தொடக்கப்பள்ளியிலும் நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ் மற்றும் இரு பாடங்களைத் தமிழில் நடத்த தமிழக அரசு இந்த ஆண்டாகிலும் வகை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment