Tuesday, 3 June 2014

மாணவர் சேர்க்கை குறைவால் கூடுதலான ஆசிரியர்கள்; காலிபணியிடங்களில் நியமிக்க தேவை நடவடிக்கை DINAMALAR


சிவகாசி ஒன்றிய அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைவால், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, வேறு ஒன்றியங்களில்,காலி பணியிட பள்ளிகளில் மாறுதல் செய்திட ,கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ,ஆசிரியர்கள் நியமனங்கள் உள்ளன.சிவகாசி ஒன்றியத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் 119 உள்ளன. இங்கு, இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு மாறுதல் இல்லை. இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1:30 என்ற விகித்திற்கும் குறைவாக உள்ளன. சிவகாசி ஒன்றியத்தில் விஸ்வநத்தம், சிவகாசி அம்மன்கோவில்பட்டி தொடக்க பள்ளி, திருத்தங்கல் எஸ்.ஆர். ஆரம்ப பள்ளி, வெள்ளூர், வாடியூர் உள்ளிட்ட சில பள்ளிகளில், கூடுதலாக உபரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. சிவகாசி ஒன்றியத்தில் மட்டும் 29 ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உள்ளன. கூடுதலாக உள்ள ஆசிரியர்களை கொண்டு, ஒரு வகுப்பிற்கு 15 மாணவர்கள் வீதம் பிரித்து, பணி செய்ய அனுமதிக்கின்றனர்.
மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை உள்ளது என்பதை கணக்கெடுத்து, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் அளிக்க, மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் ,வெளிமாவட்டங்களில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெறலாம் என்ற உத்தரவில், சிலர் மாறுதல் பெற்று வரும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மாறுதல் பெறுவதற்காக எம்.எல்.ஏ., முதல் அமைச்சர் வரை சிபாரிசு பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று மாறுதல் வாங்கி வந்தால் ,மேலும் உபரி பணியிடங்கள் அதிகரிக்கும். 
இந்த கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறந்து, ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற வில்லை. மாறுதலுக்கான கலந்தாய்வு குறிந்து ,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கே இன்னும் தெளிவான அரசு உத்தரவு எதுவும் வரவில்லை. ஒரு சில மாவட்டங்களில் மாறுதல் கோரும் ஆசிரியர்களிடம், மனு பெறுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் மனுக்கள் கூட பெறவில்லை என, ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, பள்ளிகளில் 1:30 என்ற வகிதாசாரத்தில் ஆசிரியர்கள் பணியாற்றவும், கூடுதல் ஆசிரியர்களை, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்திட, நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment